Friday, 8 June 2018

உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட சிகான் கே.இராமச்சந்திரனின் 4 ஆம் வருட நினைவு நாள்



பிரிந்தும் எம்மை விட்டுப் பிரியாத, மறைந்தும் நம்மிலிருந்து மறையாத மாமனிதர் அமரர். சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் (கறுப்புப் பட்டி - 8 ஆவது DAN) அவர்களின் 4 ஆம் வருட நினைவேந்தல் நிகழ்வானது ராம் கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியர் சிகான் கே.ஹேந்திரமூர்த்தியின் தலைமையில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேசத்தின் அக்கரைப்பற்று, தேவராஜா வீதியில் அமைந்துள்ள ராம் கராத்தே சங்கத்தில் கடந்த புதன்கிழமை (6) மாலை இறை வழிபாடு மற்றும் அவரது ஆத்ம சாந்திக்கான இரண்டு நிமிடப் பிரார்த்தனையுடன் ஆரம்பமாகிய நினைவேந்தல் நிகழ்வில் ராம் கராத்தே சங்கத்தின் சகல கறுப்புப் பட்டி வீரர்களும் மரியாதை செலுத்தி, தீபமேற்றி, மலர் தூவி தங்களது இதயபூர்வமான அஞ்சலியைச் செலுத்தினர். குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ராம் கராத்தே சங்கத்தின் சிரேஷ்ட போதனாசிரியர்கள், உதவிப் போதனாசிரியர்கள், கறுப்புப் பட்டி வீரர்கள், மாகாண தேசிய மட்ட சாதனையாளர்கள் என 50 பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அந்த நினைவேந்தல் நிகழ்வைத் தலைமைதாங்கி உரையாற்றிய ராம் கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியர் சிகான் கே.ஹேந்திரமூர்த்தி, மறைந்த மாமனிதர் அமரர். சிகான் கே.இராமச்சந்திரன் ஒரு சிறந்த ஆசான் என்பதோடு அவருக்கு இணையாக எவரையும் ஒப்பிட முடியாத சகல வல்லமைகளும் பொருந்திய ஒரு கராத்தே உலக ஜாம்பவான். அவர் எப்போதும் எதிர்மறையான நடத்தைக் கோலங்களைக் கொண்டவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கியவர் எனக் குறிப்பிட்டதோடு, அந்த மாமனிதரை இந்த இடத்தில் நினைவுகூரவேண்டும் என்ற எனது எண்ணத்துக்கு மதிப்பளித்து தூர இடங்களிலிருந்து வந்து கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

அடுத்ததாக சிகான் கே.இராமச்சந்திரனின் நினைவலைகளைப் பதிவுசெய்த ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளரும் சிரேஷ்ட கராத்தே போதனாசிரியருமான கென்சி ரி.கஜேந்திரன், மறைந்த ஆசான் கே.இராமச்சந்திரன் ஒரு திறமையான கராத்தே போதனாசிரியர் மட்டுமன்றி எம்மைப் போன்றவர்களுக்கெல்லாம் நல்லொழுக்கங்களைப் போதித்தவராகவும், சிறந்த வழிகாட்டியாகவும் எங்கள் அனைவரதும் ஆழ்மனங்களில் இடம்பிடித்து, இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்திருந்தாலும் இன்றுவரை எம்மை வழிநடாத்திக்கொண்டிருக்கும் ஒரு மாமனிதராவார். அத்தோடு எம் மாணவர்கள் தேசிய ரீதியில் சாதித்ததோடு மட்டுமல்லாமல் கடந்த வருடங்களைப் போன்று இனிவரும் நாட்களிலும் அயல் தேசங்கள் சென்று சாதித்துக் காட்ட எமக்குத் துணை நிற்பார் என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட போதனாசிரியர் கென்சி ரி.வேள் பேசும்போது, இதேபோன்றதொரு நாளில்தான் எம்மைத் தலையில் இடி தாக்கியதுபோல திக்கித்திணறி அழுதுகுழறி நின்றோம். அந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் எனது உள்ளம் குமுறுகின்றது. எவ்வாறிருந்தாலும் நாம் அனைவரும் அவரின் பிள்ளைகளாய் அவர் காட்டிய வழியிலேயே பயணித்து எம் தேசம் தாண்டி சர்வதேசத்தில் மேலும் சாதிக்க இன்றைய இளம் வீரர்கள் நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து உயர் நிலையையடையவேண்டும் எனக் குறிப்பிட்டார்.

ராம் கராத்தே சங்கத்தின் ஆலோசகரும் சிரேஷ்ட போதனாசிரியருமாகிய கென்சி கே.சந்திரலிங்கம் பேசும்போது, இந்த நினைவேந்தலில் நாம் மறைந்த சிகான் கே.இராமச்சந்திரனை ஆத்மபூர்வமாக உள்ளன்போடு நினைந்து வேண்டி நிற்பதால் அவர் எம் ஆன்மாவுக்குள் இருந்து அனைவரையும் இன்னும் சிறப்பாக வழிநடாத்திச் செல்வார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என அங்கு குறிப்பிட்டார்.

அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலயத்தின் ஓய்வுநிலை அதிபரும் கறுப்புப் பட்டி வீரருமான ஈ.லோகிதராஜா அமரர். சிகான் கே.இராமச்சந்திரனுடனான நினைவலைகளைப் பதிவு செய்கையில், சில வருடங்களுக்கு முன்னர் பொது நிகழ்வொன்றில் நான் அமரர் இராமச்சந்திரனைச் சந்தித்தபோது கராத்தே தற்காப்புக் கலையின் மீது எனக்கிருந்த அதீத ஈடுபாட்டைப் பற்றி அவரிடம் பேசினேன். எனக்கிருந்த மிகுந்த வேலைப் பளுவின் காரணமாகவும் எனது வயது அப்போது ஐம்பதைக் கடந்துவிட்டிருந்ததனாலும் என்னால் அதனைப் பயில முடியவில்லை என்ற ஆதங்கத்தை அவரிடம் சொல்லி மிகவும் மனம் வருந்தினேன். அதனைக் கேட்டுப் புன்முறுவல் பூத்த அவர், முழு நேரத்தையும் நீங்கள் இதற்காக ஒதுக்கத் தேவையில்லை. இக்கலையைப் பயில உங்கள் வயது ஒரு பிரச்சனையுமில்லை. இதே ஆர்வத்தோடு என்னோடு கூட வாருங்கள். உங்கள் ஆசையை நிறைவேற்றிக் காட்டுகின்றேன் என்று சொன்னவர் நேரடியாக இந்த ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகரும் பிரதம போதனாசிரியருமான சிகான் கே.ஹேந்திரமூர்த்தியிடம் என்னை அழைத்து வந்தார். ஆசையோடும் ஆர்வத்தோடும் அன்று தொடங்கிய பயிற்சி கடைசியில் என்னையும் ஒரு கறுப்புப் பட்டி வீரனாக மாற்றியது. சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை இந்த உலகுக்கு நிரூபிப்பதற்கு ஒரு உயிருள்ள உதாரணமாக என்னைத் திடப்படுத்திய அவரை என் கடவுளுக்கு நிகராகப் பார்க்கிறேன். அதுபோல கராத்தே கலையை எனக்குக் கற்பித்த எனது நண்பன் சிகான் கே.ஹேந்திரமூர்த்தியையும் மிகப் பெருமையுடன் இங்கே நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

இறுதியாக ராம் கராத்தே சங்கத்தின் செயலாளர் கென்சி எம்.பி.செய்னுல் ஆப்தீன் தனது நன்றியுரையுடன் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளை நிறைவு செய்தார்.

இலங்கை கராத்தே சம்மேளனத்தின் தலைவராக, இலங்கை கராத்தே சம்மேளனத்தின் நடுவர் சங்கத் தலைவராக, தொழில்நுட்பக் குழுவின் தலைவராக, அதன் உப தலைவராக பல பதவிகளை வகித்திருந்த அமரர். சிகான் கே.இராமச்சந்திரன் அவரது பதவிக் காலத்தில் அவற்றைச் சிறப்பாக வழிநடத்தியவர் என்பதோடு ஆரம்ப காலத்தில் ஆசிய நடுவர் குழாமில் சிறப்புடன் பணியாற்றியிருந்தவர். கடந்த 1970 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்தப்பட்ட ஆண்களுக்கான கட்டழகர் போட்டியில் கலந்துகொண்டு Mr. Batticaloa பட்டத்தை வென்றிருந்த அவர் தனது 65 ஆவது வயதில் (06.06.2014) ஏற்பட்ட திடீர் மாரடைப்பினால் இயற்கையடைந்தார்.













No comments: