கடந்த அரசாங்கம் ஏழை மக்களையும் விட்டுவைக்கவில்லை. ஏழைக் குடும்பங்களினால் சமூர்த்தி வங்கிகளில் வைப்பிலிடப்பட்டிருந்த 300 மில்லியன் ரூபாவை கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, அவர்கள் செலவு செய்துள்ளனர் என சமூர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வீட்டுக்கடன் மற்றும் வாழ்வாதாரக்கடனுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு, அம்பாறை தயாகமகே ஆடைத்தொழிற்சாலை கூட்ட மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பஸ் போக்குவரத்து, உணவு மற்றும் ஊடக செலவுகளுக்காக நாளாந்தம் 63 மில்லியன் ரூபாவை அவர்கள் செலவு செய்துள்ளனர். ஏழை மக்களையும் நிதி நிறுவனங்களையும் கடந்த அரசாங்கம் தங்களது தேவைகளுக்காகவும் பயன்படுத்தி உள்ளனர்' என்றார்.
'வறுமை ஒழிப்புத் திட்டமான சமூர்த்தித் திட்டம் முறையாக கொண்டுசெல்லப்படவில்லை. உறவினர்களுக்கும் தெரிந்தவர்களுக்குமே முன்னுரிமையுடன் அதன் பலாபலன்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த சமூர்த்தித் திட்டத்தை கொண்டுசெல்வதில் பாரிய சவால் உள்ளது. இந்த நாட்டில் 51 இலட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்கள் அனைவரும் இந்த நாட்டை சேர்ந்தவர்கள். ஏதோவொரு வகையில் இவர்கள் எமக்கு தெரிந்தவர்கள். அதற்காக 51 இலட்சம் குடும்பங்களுக்கும் சமூர்த்தி உதவியை வழங்கமுடியாது.
உரிய பயனாளிகளையும் தகுதியானவர்களையும் தெரிவுசெய்வதற்காகவே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த அதிகாரிகள் முறையாக செயற்படாதுபோனால், 51 இலட்சம் குடும்பங்களுக்கும் வழங்கவேண்டிய நிலையேற்படும். 51 இலட்சம் குடும்பங்களுக்கும் வழங்குவதாயின், இதற்கு அதிகாரிகள் தேவையில்லை' எனவும் அவர் கூறினார்.
'அத்துடன், தற்போதய அரசாங்கம் முறையான திட்டங்களை தயாரித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சிறந்த வழிகாட்டுதலுடன் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது' எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment