பிரேம்...
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இயங்கிவரும் பாலர் பாடசாலைகளது கண்காணிப்பு, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள இணைப்புக்குழுவின் முதலாவது உத்தியோகபூர்வக் கலந்துரையாடல் இன்று (18) காலை 9.00 மணிக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தனால் ஏற்பாடு செய்யப்பட்டு, பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் திருக்கோவில் வலயக்கல்விப் பணிமனையின் உயரதிகாரிகள், ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆலையடிவேம்பு பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அதிகமாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுவரும் விடயங்களான பாலர் பாடசாலைகளின் சுகாதாரமற்ற சூழல், கழிப்பிட வசதிகள், சிறார்களுக்கு வழங்கப்பட்டுவரும் உணவு, குடிநீர் போன்றவற்றை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன் பரிசோதனைக்கு உட்படுத்தல், தாய்மொழிக் கல்வியைப் புறக்கணித்து ஆங்கிலக் கல்வியை முதன்மைப்படுத்தி பெற்றோரிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்கும் இலாப நோக்கோடு இயங்குகின்ற தனியார் பாடசாலைகளைக் கண்டறிந்து பொலிசாரின் உதவியுடன் அவற்றுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்தல், பாடசாலைகளை ஆரம்பிக்கும் முடிவுறுத்தும் ஒரு ஸ்திரமான நேர அளவை நிர்ணயித்தல், பிரதேச செயலாளருக்கோ வலயக்கல்விப் பணிப்பளருக்கோ எவ்வித முன்னறிவித்தலும் வழங்காது பாடசாலைகளை மூடுதல், தனியார் அமைப்புக்களால் தேவையற்ற விதத்தில் ஆசிரியைகளைப் பொருந்தாத பயிற்சிகளுக்கு அழைத்தல்
மற்றும் வழங்குதல், புறக்கிருத்தியச் செயற்பாடுகளுக்காக மாணவர்களின் பெற்றோரிடமிருந்து அதிக பணம் வசூலித்தல், முன்னனுமதி பெறப்படாத சுற்றுலாக்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லுதல் போன்ற பல விடயங்கள் அறிக்கையிடப்பட்டதுடன், குறித்த இணைப்புக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் கிரமமான அட்டவணை ஒன்றின் அடிப்படையில் ஒவ்வொரு பாலர் பாடசாலைக்கும் விஜயம் செய்து மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கண்காணிப்புக்களை மேற்கொண்டு அவற்றை சரிப்படுத்துவதற்கான வழிகாட்டல்களையும் உதவிகளையும் வழங்குதல் தொடர்பான தீர்மானங்கள் இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment