பிரேம்
வரலாற்றுத் தொன்மைமிக்க அக்கரைப்பற்று, பனங்காடு, பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் கடந்த 28-05-2015 முதல் இடம்பெற்றுவரும் வருடாந்த வைகாசித் திருக்குளிர்த்தி மஹோற்சவத்தின் இன்றைய ஆறாம் நாள் திருவிழாவைச் சிறப்பிக்கும் வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் தாகசாந்தி வைபவம் மற்றும் கண்ணகிபுரம் பிரதேச இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட அன்னதான வைபவம் என்பவற்றை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் இன்று, 02-06-2015 செவ்வாய்க்கிழமை ஆலய வளாகத்தில் ஆலயத் தலைவர், ஆலய நிருவாகசபையினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களோடு இணைந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
கிழக்கிலங்கையில் பாடல் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு இலங்கையில் பல பாகங்களிலிருந்தும் இன்றைய ஆறாம் நாள் சிறப்புத் திருவிழாவில் கலந்துகொண்டு, கண்ணகி அம்மனின் பேரருளைப் பெற்றேக வருகைதந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் தாகசாந்தி நிலையத்திற்கு வருகைதந்திருந்து தகிக்கும் கோடை வெயிலின் கோரத்தைக் குறைத்துக்கொண்டனர்.
அதனையடுத்து இடம்பெற்ற ஆலயப்பூஜை மற்றும் சம்பிரதாயச் சடங்குகளில் பிரதேச செயலாளர் தனது கும்பத்தாரோடும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களோடும் பொதுமக்களுடனும் இணைந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
தொடர்ந்து கண்ணகிபுரம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரியின் அழைப்பினை ஏற்று இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட அன்னதான வைபவத்தினை பிரதேச செயலாளர், இராணுவப் பொறுப்பதிகாரி, ஆலய சமூகத்தினர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களோடு இணைந்து மங்கல விளக்கேற்றி, சமய அனுட்டானங்களோடு ஆரம்பித்துவைத்தார். அத்துடன் இராணுவத்தினருடன் இணைந்து அன்னதானத்தில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு உணவைப் பகிர்ந்தளிக்கும் வேலைகளிலும் அவர் ஈடுபட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
No comments:
Post a Comment