Friday, 5 June 2015

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற புகைத்தல் எதிர்ப்பு தினப் பேரணியும் வாழ்வாதாரக் கடன் வழங்கலும்

பிரேம் 







உலகளாவிய ரீதியில் கடந்த மே, 31 அன்று அனுஸ்டிக்கப்பட்ட சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை நினைவுகூரும் விசேட விழிப்புணர்வுப் பேரணியும் ‘திரிய சவிய’ வாழ்வாதாரக் கடன் வழங்கும் வைபவமும்  04-06-2015 வியாழக்கிழமை காலை பனங்காட்டில் இடம்பெற்றன.

முதலில் ஆலையடிவேம்பு பிரதேச திவிநெகும திணைக்கள சமுக அபிவிருத்திப் பிரிவின் சமுக அபிவிருத்தி உதவியாளர் எம்.தெய்வேந்திரனால் ஏற்பாடு செய்யப்பட்ட புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி கிராமமட்ட திவிநெகும அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் பனங்காடு தபால் நிலையச் சந்தியிலிருந்து ஆரம்பமாகி சாகாம வீதியிலுள்ள ஆலையடிவேம்பு தெற்கு, வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிக்கு முன்னால் நிறைவடைந்தது. இதன்போது குறித்த நிகழ்வுகளுக்கு அதிதிகளாக வருகை தந்திருந்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், திவிநெகும திணைக்களத்தின் ஆலையடிவேம்புக்கான பிரதேச உத்தியோகத்தர் கே.நேசராஜா, திவிநெகும மகா சங்கங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.பரமானந்தம் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச ஆகியோர் மாலையிட்டு வரவேற்கப்பட்டதுடன், அதிதிகளுக்கு சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை நினைவுகூரும் விசேட கொடி அணிவிக்கும் நிகழ்வும் தொடர்ந்து கொடி விற்பனையும் இடம்பெற்றது.

அடுத்து ஆலையடிவேம்பு தெற்கு, வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘திரிய சவிய’ வாழ்வாதாரக் கடன் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்ட அதிதிகளின் உரையைத் தொடர்ந்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் பிரதேச செயலாளரிடமிருந்து தலா 50,000/- வீதம் தமக்கான வாழ்வாதாரக் கடன்களைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச திவிநெகும திணைக்களப் பிரிவு உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் பிரசன்னமாயிருந்தனர்.

No comments: