அம்பாரை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு விரைவில் கொண்டு செல்லப்படும் என கிழக்கு மாகாணசபை சபாநாயகர் ஏ.பி.சந்திரதாச கலப்பதி உறுதியளித்தார்.
அம்பாரை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அமைப்பினருக்கும் கிழக்கு மாகாணசபை சபாநாயகருக்கும் இடையிலாக இன்று (21) ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அம்பாரை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அமைப்பின் தலைவர் அ.அரிகரன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் அதிகளாவான தமிழ் பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
சபாநாயகர் அங்கு உரையாற்றுகையில் கடந்த ஜனவரி மாதத்திற்கு பின்பே நாட்டில் சுமூகமான நிலை ஏற்படுத்தப்பட்டது. அதனூடாக நாட்டில் ஜனநாயகம் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. இருந்த போதிலும் 100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கம் சிறந்த ஸ்திரமான நிலையில் இல்லை என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆகவே எதிர்வரும் காலத்தில் சிறந்த நிலையான நேர்மையான அரசை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
மேலும் கடந்த காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் ஒருவரே இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. அவர் கல்வியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து தொழில் வாய்ப்புக்களை உருவாக்கியவர். எதிர்காலத்தில் 10இலட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்;கும் திட்டத்தினையும் வகுத்து வருகின்றார். ஆகவே அதனூடாக உங்களது பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும் என்றார்.
சமகாலத்தில் கல்விக்கல்லூரி செல்கின்றவர்கள் கல்வியை நிறைவு செய்து வெளியேறுகின்போதே தொழில் வாய்ப்பினை பெறுகின்றனர். ஆனால் பல்கலைகழகம் செல்கின்றவர்கள் 4வருடங்கள் கடந்தும் தொழில் வாய்ப்பின்றி வீடுகளில் முடங்கி கிடப்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என்றார்.
ஆகவே தமிழ் பட்டதாரிகளின் நிலை குறித்து முதலில் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் பேசப்படும். அதற்கும் தகுந்த சாதகமான பதில் கிடைக்காதவிடத்து ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உரிய தீர்வினை பெற்றுத்தருவற்கு ஆவன செய்வேன் என்றார்.
இச்சந்திப்பின்போது அம்பாரை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் கடந்த பல வருடங்களாக எதிர்நோக்கிவருகின்ற வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகள் பற்றி பட்டதாரிகள் அமைப்பின் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்களால் சபாநாயகருக்கு தெளிவு படுத்தப்பட்டதுடன் எதிர்வரும் தேர்தலுக்கு முன் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனும் கோரிக்கையினையும் முன்வைத்தனர்.
இங்கு உரையாற்றிய அமைப்பின் செயலாளர் பா.தட்சாயனண் குறிப்பிடுகையில் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ் தலைமைகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் மக்கள் நலன் சாராமல் செயற்படும் அவர்களை தாங்கள் எதிர்ப்பதாகவும் கூறினார்.