அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மாற்றுக் கட்சிக்கு சோரம் போகாது தமிழர்களின் உரிமை பயணத்துக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றியடையச் செய்து எமது பலத்தை சர்வதேசத்துக்கு மீண்டுமொருமுறை நிரூபித்து காட்டியுள்ளனர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், என்னுடைய அரசியல் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் எனக்கெதிராக மக்கள் மத்தியில் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அம்பாறை மாவட்ட மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றியடைய செய்துள்ளதால் மாவட்டத்தில் இரண்டாவது நிலையில் தெரிவாகியுள்ளேன் என்றார். மேலும்,அம்பாறை மாவட்ட மக்களுடைய விடுதலைக்காக என்னுடைய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். தமிழர்களுக்கு அநீதி வரும்போது தடுத்து நிறுத்துவேன் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment