இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஜூலை 9 முதல் ஆகஸ்ட் 8 வரை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த தேசிய போதைப்பொருள் தடுப்பு மாதத்தினையொட்டி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் மகாராஜா (MTV) ஊடக வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வூட்டலை நோக்காகக்கொண்ட இல்லத் தரிசிப்புகள் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள நாவற்காடு கிராமத்தில் நேற்று (9) காலை இடம்பெற்றன.
சக்தி தொலைக்காட்சி செய்திப்பிரிவின் தொகுப்பாளர் நாகலிங்கம் ஜெகநாத் கண்ணா தலைமையில் நியூஸ் பெஸ்ற் (News 1st) செய்திப்பிரிவினரும், தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆலோசகர் ஏ.காலித் மற்றும் புனர்வாழ்வு உத்தியோகத்தர் அசார் அஹமட் ஆகியோருடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், கிராமசேவை நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச, நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், பிரதேச செயலாளரின் வெகுஜனத் தொடர்பு உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த், கிராம உத்தியோகத்தர்களான ஏ.சுபராஜ் மற்றும் கே.பிரதீபா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.சமனந்தகுமார, எஸ்.பார்த்திபன், திருமதி. ஜெயர்ஜினி பார்த்தீபன், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ரி.அழகரெத்தினம், எஸ்.கற்பகம், ஏ.டபிள்யூ.கணேசமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினராக நாவற்காடு கிராமத்திலுள்ள பொதுமக்களின் வீடுகளுக்கு விஜயம் செய்து குடும்பத் தலைவர்களின் மது, சிகரட் உள்ளிட்ட போதை தரக்கூடியதும், உடற்சுகாதாரத்துக்குக் கேடு விளைவிக்கக்கூடியதும், புற்றுநோய் போன்ற கொடிய வியாதிகளை உண்டாக்கக்கூடியதுமான பொருட்களை நுகர்வதிலிருந்து தவிர்த்துக்கொள்ளல் தொடர்பாகக் குடும்ப அங்கத்தவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக மகா கணபதி ஆலயத்தில் இடம்பெற்ற சமய அனுஸ்டானங்களோடு ஆரம்பமான இந்நிகழ்வில் குறிப்பிடத்தக்க விடயமாக, கல்வி கற்கும் இளைஞர்கள் தாம் வாழ்கின்ற சமுகத்தில் பல்வேறு வழிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் போதைப்பொருட்களுக்கு அடிமையாவதன்மூலம் அவர்களது எதிர்கால வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாவது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் பெற்றோர்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிக அறிவுத்தல்கள் குறித்த குழுவினரால் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வின்போது நாவற்காடு கிராமத்தில் சுமார் 100 இல்லத் தரிசிப்புக்கள் இடம்பெற்றதுடன், எமது நாட்டின் மேன்மை தங்கிய ஜனாதிபதியின் குறித்த சமுக மேம்பாட்டு வேலைத்திட்டத்தில் எவ்வித வர்த்தக நோக்குமில்லாது தம்மையும் இணைத்துக்கொண்டு ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இவ்விழிப்புணர்வூட்டல் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்த மகாராஜா (MTV) ஊடக வலையமைப்பிற்குத் தமது பிரதேச மக்கள் சார்பில் பிரதேச செயலாளர் நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment