இலங்கை அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் அணித்தலைவருமான குமார் சங்கக்கார, சர்வதேசப் போட்டிகளிலிருந்து இன்றிலிருந்து உத்தியோகபூர்வமாக விடைபெற்றார். இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முடிவிலேயே அவர் ஓய்வுபெற்றார்.
சங்கக்கார விடைபெற்ற போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு முடிவடைந்ததன் பின்னர், குமார் சங்கக்காரவுக்கு கௌரவம் வழங்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் முன்னாள் அணித்தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க ஆகியோர் இதில் கலந்துகொண்டு, குமார் சங்கக்காரவைக் கௌரவித்தனர். இந்தக் கௌரவிப்பு நிகழ்வின்போது கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, குமார் சங்கக்காரவுக்கு கோரிக்கை விடுத்தார். தனது நன்றியறிதல் உரையில், தனது கிரிக்கெட் வாழ்வில் பங்களித்த அனைவருக்கும் நன்றி செலுத்திய குமார் சங்கக்கார, இரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
அத்தோடு, அஞ்சலோ மத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணிக்கு அற்புதமானதொரு எதிர்காலம் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment