அம்பாறை, கஞ்சிகுடியாறு கிராம அலுவலர் பிரிவிலுள்ள தாமரைக்குளம் கருணகல்லாறு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் மூன்று வயதுடைய பெண் யானைக்குட்டியொன்று நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளது. பொறிவெடி வெடித்ததன் காரணமாக இந்த யானைக்குட்டியின் வாயில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால், உணவு உட்கொள்ளவோ, நீர் அருந்தவோ முடியாதவாறு இந்த யானை உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இந்த நிலையிலேயே யானைக்குட்டி உயிரிழந்துள்ளதாக தம்பிலுவில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரி ஏ.ஏ.ஹலீம் தெரிவித்தார். திருக்கோவில் பிரதேசத்தில் மர்மமான முறையில் யானைகள் மரணமடைவதை தடுக்கும் நோக்கில் இவ்வாறு மிருகவதை மேற்கொள்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு பொலிஸாரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் குழுக்கள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வருடம் திருக்கோவில் பிரதேசத்தில் மட்டும் 06 காட்டு யானைகள் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment