பிரேம்...
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவு நடாத்திய பாடசாலை மாணவ, மாணவியருக்கான கட்டிளமைப்பருவ விருத்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (13) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் “சக்தி மிக்க இறக்கைகளையுடைய வண்ணத்துப்பூச்சியாதல்” எனும் கருப்பொருளில் இடம்பெற்ற இக்கருத்தரங்கிற்கு வளவாளராக ஓய்வுபெற்ற முன்னாள் அக்கரைப்பற்று மாவட்ட வைத்திய அதிகாரி திருமதி. சித்திரா தேவராஜன் கலந்து சிறப்பித்தார். மேலும் பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. யசோதா கபிலன், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சிபாயா றமீஸ், உளவள ஆலோசகர் ஏ.எம்.சப்றினா ஆகியோரும் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்களும் பொறுப்பாசிரியர்களும் கலந்துகொண்டனர்.
தொழில்நுட்ப வளர்ச்சி அபரிமிதமாகக் காணப்படும் இன்றைய சமுகச்சூழலில் பருவவயதை எட்டியுள்ள சிறுவர், சிறுமியர்கள் எதிர்கொள்ளக்கூடிய பாலியல் தொடர்பான துஷ்பிரயோகங்கள் தொடர்பாக எடுத்துரைத்த வைத்திய அதிகாரி திருமதி. சித்திரா தேவராஜன், அவை எவ்வாறான சந்தர்ப்பங்களில், யாரால் ஏற்படுகின்றன, இதற்கான அடிப்படைக் காரணங்கள் எவை, எவ்வாறு இவற்றிலிருந்து தவிர்த்துக்கொள்வது, துஷ்பிரயோகங்கள் இடம்பெறும்போது அவற்றை யாரிடம் முறையிடலாம், இது தொடர்பான குற்றங்களுக்கு எவ்வாறான தண்டனைகள் வழங்கப்படுகின்றன போன்ற பல விடயங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கங்களை வழங்கியதுடன், கட்டிளமைப் பருவத்தில் பேணப்படவேண்டிய உடற்சுகாதாரம் தொடர்பான விடயங்களையும் தெளிவுபடுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு விடையளித்த அவர், குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு பருவமடையும் வயதில் ஏற்படக்கூடிய உடலியல் மாற்றங்களையும் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் உளவியல் பிரச்சனைகள் தொடர்பிலும் கருத்துரைத்ததுடன், அக்காலகட்டத்தில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களை அணுகவேண்டிய முறைகள், அவர்களுக்கு ஆதரவாய் இருக்கவேண்டியதன் அவசியம் என்பன தொடர்பாகவும் விரிவான விளக்கங்களை வழங்கினார்
No comments:
Post a Comment