பிரேம் ....
கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுக சேவைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தேவையுடையோருக்கான இலவச உபகரணங்கள் வழங்கும் வைபவம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேவைகளை வழங்குகின்ற முதியோர் சங்கங்களுக்கான பதிவுச்சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் என்பன இன்று, 28-05-2015 வியாழக்கிழமை காலை ஆலையடிவேம்பு பிரதேச சமுகப் பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுக சேவைகள் பிரிவின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.சி.எம்.ரகீப் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபங்களுக்குப் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்துகொண்டு விசேட தேவையுடையோருக்கான இலவச சக்கர நாற்காலிகளையும், ஊன்றுகோல்களையும், மூக்குக் கண்ணாடிகளையும் வழங்கிவைத்தார். தொடர்ந்து இடம்பெற்ற முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேவைகளை வழங்குவதற்கு அங்கீகாரமளிக்கப்பட்ட முதியோர் சங்கங்களுக்கான பதிவுச்சான்றிதழ்கள் வழங்கும் வைபவத்தில் 9 கிராமசேவகர் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்களின் தலைவர்கள் தமது முதியோர் சங்கங்களுக்கான பதிவுச்சான்றிதழ்களைப் பிரதேச செயலாளரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் குறித்த சங்கங்கள் தமது செயற்பாடுகளில் எதிர்கொண்டுவரும் பிரச்சனைகள் தொடர்பாகக் கேட்டறிந்த பிரதேச செயலாளர், முதியோர்களுக்கான தேசிய செயலகம் மற்றும் பிரதேச செயலக சமுக சேவைகள் பிரிவு உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் அவற்றைத் தீர்த்துவைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராமசேவை நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ, சமுர்த்தி மகா சங்கங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.பரமானந்தம், சமுக சேவைகள் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.சண்முகநாதன், ஆர்.சிவானந்தம் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் யு.எல்.உவைஸ் அகமட் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment