Friday, 20 November 2015

சிரேஷ்ட பிரஜைகளுக்கான பிரதேச சம்மேளனம் அமைக்கப்பட்டது...

ஆனந்த் பிரேம்ஸ்...
சமூகசேவைகள் திணைக்களத்தின் தேசிய முதியோர் செயலகத்தின் அனுசரணையோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமூகசேவைகள் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் சிரேஷ்ட பிரஜைகளுக்கான பிரதேச சம்மேளனம் அமைக்கும் வைபவமும் அச்சம்மேளனத்தின் நிதி முகாமைத்துவம் மற்றும் முதியோர் சுகாதார மேம்பாடுகள் போன்றவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளும் இன்று (20) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றன.

ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கிராமமட்டங்களில் பதிவுசெய்யப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் அமைப்புகளிலிருந்து சுமார் 50 உறுப்பினர்கள் கலந்துகொண்ட குறித்த நிகழ்வுகள் சமூகசேவைகள் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.சிவானந்தத்தின் வரவேற்புரையோடு ஆரம்பமாயின. முதலில் தெரிவுசெய்யப்படவுள்ள சிரேஷ்ட பிரஜைகளின் சம்மேளனத்தால் பிரதேசமட்ட அரச மற்றும் அரசுசாரா அலுவலங்களோடு பேணப்படவேண்டிய தொடர்புகள் சம்மந்தமாக பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பங்குபற்றுனர்களைத் தெளிவுபடுத்தினார்.

அடுத்து சிரேஷ்ட பிரஜைகளின் சம்மேளனத்தால் பின்பற்றப்படவேண்டிய அதன் நிதிசார் முகாமைத்துவம் தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கணக்காளர் கே.கேசகன் விளக்கமளித்தார். இதன்போது கணக்குகளைப் பதிவுசெய்யும் முறைகள், வரவு-செலவுகளைப் பேணும் முறைகள், நிதி சார்ந்த பதிவுகளையும் கையிருப்புக்களையும் பேணும் முறைகள் மற்றும் பதிவுகளைச் சரிபார்க்கும் முறைகள் என்பன தொடர்பாகத் தெளிவாக விளங்கச்செய்தார்.

தொடர்ந்து சிரேஷ்ட பிரஜைகள் தமது ஆரோக்கியம் தொடர்பில் கைக்கொள்ளவேண்டிய உணவுப் பழக்கவழக்கங்கள், எளிதான உடற்பயிற்சிகள், ஒழுங்குமுறையான வாழ்க்கை முறைகள் என்பன தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.முனவ்வர் பங்குபற்றுனர்களைத் தெளிவுபடுத்தினார்.

அதனையடுத்து ஆலையடிவேம்பு பிரதேசத்திலிருந்து தேசிய முதியோர் செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட மூத்த பிரஜைகளுக்கு ஐயாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கும் வைபவமும், தேசிய முதியோர் செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கிராமமட்ட சிரேஷ்ட பிரஜைகள் அமைப்புக்களுக்கான பதிவுச்சான்றிதழ்கள் வழங்கும் வைபவமும் பிரதேச செயலாளரது தலைமையில் இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கிராமமட்டங்களில் பதிவுசெய்யப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் அமைப்புக்களின் உறுப்பினர்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட, இறைபணிச் செம்மல் ரி.கைலாயபிள்ளையைத் தலைவராகவும், உப தலைவர், செயலாளர், உப செயலாளர், பொருளாளர் உட்பட 9 பேரை உறுப்பினர்களாகவும் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான பிரதேசமட்ட சம்மேளனம் அமைக்கப்பட்டு அதன் பணிகள் தொடர்பாக உறுப்பினர்களுக்கும் ஏனையோருக்கும் பிரதேச செயலாளரால் பணிப்புரைகள் வழங்கப்பட்டன.
















No comments: