Wednesday, 25 November 2015

இலங்கையில் எச்3.என்2 இன்புளுவன்சா

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையில் எச்3.என்2 இன்புளுவன்சா பரவி வருவதாக தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகரும் மருத்துவருமான டொக்டர் சி.ஜே.எஸ்.ஜயமஹா தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், 200 நோயாளர்களிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும் இதில் 50 பேருக்கு இந்த வைரஸ்  தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் தொற்று, வருடத்துக்கு இரண்டு முறை ஏற்படும். மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய காலப்பகுதியிலும் டிசெம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய காலப்பகுதிகளிலும் இந்த வைரஸ் தொற்று ஏற்படும்.
இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள், காய்ச்சலின் முதல் நாளிலேயே அரச வைத்தியசாலையில் அல்லது தகுதியான வைத்தியரிடம் மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளவது அவசியம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இளைஞர்களும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நாள்பட்ட சுகயீனங்கள், அதாவது இருதயநோய், நீரிழிவு மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய் உள்ளவர்களும், இது குறித்து மருத்துவ சிகிச்சையை உடனடியாக பெறவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வைரஸ் தொற்றுக்கு, ஏனைய தொற்றுக்களைப் போல, மூக்கு வடிதல், தொண்டை வலி, இருமல், காய்ச்சல், தலைவலி, உடற்தசை வலி போன்றவை ஏற்படும்.
சனநெருக்கடியான இடத்தைத் தவிர்த்தல், அலுவலகம் அல்லது வெளியிலிருந்து வீட்டுக்குச் செல்லும் போது கைகளைச் சவர்க்காரமிட்டுக் கழுவுதல், எதிரே உள்ளவர்களின் சுவாசம் படும்படியாக பேசுவதை தவிர்த்தல், முகத்துக்கு முகமூடி அணிதல் அல்லது இருமும் போது வாய்க்கு துணி வைத்துக்கொள்ளல் போன்றவற்றைச் செய்வதன் மூலம், இந்த வைரஸ் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ளமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments: