Thursday, 7 January 2016

நல்லாட்சியின் ஒருவருடப் பூர்த்தியை முன்னிட்டு ஆலையடிவேம்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வுகள்

இலங்கைத் திருநாட்டின் ஏழாவது ஜனாதிபதியும், நிறைவேற்று அதிகாரமுடைய ஆறாவது ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பூஜை வழிபாடு, தேசிய மரநடுகை வைபவம் மற்றும் கல்விக்கான உதவி வழங்கும் நிகழ்வுகள் என்பன ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (8) காலை இடம்பெற்றன.


பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் முதலில் தேசியக் கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் ஜனாதிபதிக்கும், அவரது நல்லாட்சிக்கும் ஆசிகள் வேண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பூஜை வழிபாடுகளில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் உட்படப் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

அதனையடுத்து பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற தேசிய மரநடுகை வைபவத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் அதிகாரிகள் இணைந்து நெடுங்காலப் பயன்தரும் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

அடுத்து பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் சமுக சேவைகள் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான மாதாந்த உதவிப்பணம் வழங்கும் வைபவத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கான கொடுப்பனவுகள் பிரதேச செயலக அதிகாரிகளால் வழங்கிவைக்கப்பட்டன.

இறுதியாக இடம்பெற்ற சமுர்த்தி உதவி பெறும் மாணவர்களுக்கான சிப்தொற புலமைப்பரிசில்கள் வழங்கும் வைபவத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறப்பான சித்திகளைப் பெற்றுப் பல்கலைக்கழகத்துக்குச் செல்லவுள்ள அளிக்கம்பை கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது உயர்கல்விக்கான உதவுதொகையைப் பிரதேச செயலாளரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

மேலும் ஜனாதிபதியின் ஒருவருடப் பதவிக்காலத்தின் பூர்த்தியை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சமய, சிரமதான, மரநடுகை மற்றும் உதவி வழங்கும் நிகழ்வுகள் என்பன கிராமசேவகர் பிரிவுகள் தோறும் பொதுமக்களின் பங்குபற்றுதலோடு இன்று பரவலாக இடம்பெற்றுவருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.










No comments: