இலங்கை
சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
ஆலோசனைகளுக்கமைய ஜனாதிபதியின் செயலகமும் விளையாட்டுத்துறை அமைச்சும் தேசிய இளைஞர்
சேவைகள் மன்றமும் இணைந்து நாடு தழுவிய ரீதியில் ஜனவரி, 25 முதல் 30 வரை ஏற்பாடு
செய்துள்ள தேசிய விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரத்தைச்
சிறப்பிக்கும்வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த இரண்டாம் நாள் நிகழ்வுகளான பாரம்பரிய மற்றும் கரப்பந்தாட்ட
விளையாட்டுப் போட்டிகள் இன்று (26) காலை அக்கரைப்பற்று, ஸ்ரீ தம்மரதன சிங்கள மகா
வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றன.
பிரதேச
செயலாளர் வி.ஜெகதீசன் தலைமைதாங்கிய இப்போட்டி நிகழ்ச்சிகளை ஆலையடிவேம்பு பிரதேச
விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிசந்தன் மற்றும் திறன் அபிவிருத்தி உதவியாளர்
வி.நடனகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். அத்துடன் குறித்த போட்டி
நிகழ்ச்சிகளை நடாத்தும்பொருட்டு மைதான ஒழுங்கமைப்புக்களை அபிவிருத்தி
உத்தியோகத்தர்களான கே.எஸ்.பாபுஜி, கே.கிரிஷாந்தன், வை.இதயதினேஸ் மற்றும் கிராம
உத்தியோகத்தர் எஸ்.அருள்ராஜா ஆகியோரும், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை பெண்கள்
அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சிபாயா றமீஸும் ஏற்பாடு செய்திருந்தனர்.
பிரதேச
செயலாளர் வி.ஜெகதீசனுடன் உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் மற்றும் நிருவாக
உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வுகளில்
பிரதேச செயலாளரின் தலைமையுரையைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாயின.
முதலில்
இடம்பெற்ற சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியில் அக்கரைப்பற்று, ஸ்ரீ இராம
கிருஷ்ணா தேசிய கல்லூரி அணியும், இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலய அணியும்
பங்குபற்றியிருந்தன. இப்போட்டியில் பௌதிகவியல் ஆசிரியர் என்.நேசராஜாவின் தலைமையின்
கீழ் கலந்துகொண்ட அக்கரைப்பற்று, இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலய அணி
வெற்றிபெற்றது.
அடுத்து
ஆரம்பமான தமிழர் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் மாதர் கிராம அபிவிருத்திச்
சங்க உறுப்பினர்களும், கிராமமட்ட மகளிர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும்
ஆர்வத்தோடு பங்குபற்றியிருந்தனர். முதலில் இடம்பெற்ற கிடுகிழைத்தல் போட்டியில்
வேலன் வள்ளியம்மை வெற்றிபெற்றார். அடுத்து இடம்பெற்ற தேங்காய் துருவும் போட்டியை
கணபதிப்பிள்ளை செல்வராணி வென்றதுடன், இறுதியாக இடம்பெற்ற வேகநடைப் போட்டியில்
குகநாதன் ஜனனி வெற்றிபெற்றிருந்தார்.
இப்போட்டிகளில்
வெற்றிபெற்ற வீர, வீராங்கனைகளுக்கான பரிசுகள் எதிர்வரும் சனிக்கிழமை (30) இடம்பெறவுள்ள
மாபெரும் இறுதிநாள் நிகழ்வில் வழங்கிவைக்கப்படவுள்ளதுடன், தேசிய விளையாட்டு
மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரத்தின் ஆரம்பநாள் விசேட நிகழ்வுகள்
நேற்றையதினம் (25) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தர்கள் பங்குபற்றிய
நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி என்பவற்றுடன் ஆரம்பித்துவைக்கப்பட்டிருந்தமையும்
இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment