ஆலையடிவேம்பு
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இவ்வருடத்திற்கான முதலாவது கூட்டம் அதன்
தலைவரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின்
இணைத் தலைவருமான கவிந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் இன்று (19) காலை ஆலையடிவேம்பு
பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலகத் திட்டமிடல் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில் கிழக்கு
மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன், பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், உதவிப் பிரதேச
செயலாளர் ரி.கஜேந்திரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, நாடாளுமன்ற
உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் உட்பட ஆலையடிவேம்பு பிரதேச அரசியல் பிரமுகர்கள்,
அரச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள், கமக்காரர்
அமைப்பின் அங்கத்தவர்கள், பாடசாலை அதிபர்கள், மாதர் கிராம மற்றும் கிராம அபிவிருத்திச்
சங்க உறுப்பினர்கள், வர்த்தகர்கள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமக்காரர்கள்,
இளைஞர் கழக உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டம் மங்கல விளக்கேற்றல்
மற்றும் இறைவணக்கத்துடன் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
முதலில்
இடம்பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரது வரவேற்புரையைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய
நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்
நோக்கங்கள் குறித்துப் பேசினார்.
அதனைத்
தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் இவ்வருடத்துக்காக முன்மொழியப்பட்டுள்ள
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்
கே.பாக்கியராஜா அங்கு கூடியிருந்தோருக்குத் தெளிவுபடுத்தினார். அதனையடுத்து அரச திணைக்களப்
பிரதிநிதிகளுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இதன்போது
ஆலையடிவேம்பு பிரதேசப் பாடசாலை அதிபர்கள் தமது பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள்
தொடர்பாகவும், பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் பிரதேச வைத்திய அதிகாரி மற்றும்
பனங்காடு கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் இணைந்து அவ்வைத்தியசாலையில் தற்போது
நிலவிவருகின்ற குறைபாடுகள் தொடர்பாகவும், அங்கு காணப்படும் கட்டடப் பற்றாக்குறையால்
நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதில் எதிர்நோக்கப்படும் பிரச்சனைகள் தொடர்பாகவும் நாடாளுமன்ற
உறுப்பினருக்குத் தெரியப்படுத்தினர்.
அடுத்துப்
பேசிய கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், காட்டு யானைகளால் தாம் அன்றாடம் எதிர்நோக்கிவருகின்ற
அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும், விளைச்சல் பாதிக்கப்படல் மற்றும் நீர்ப்பாசனப்
பிரச்சனைகள் என்பன தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தமது முறைப்பாடுகளை
முன்வைத்தனர். அவற்றுக்குப் பதிலளித்த அவர் யானைகளின் அத்துமீறல்களைத்
தடுப்பதற்கான மின்சார வேலிகளை அமைக்கும் வேலைத்திட்டத்துக்கான முன்மொழிவுகள்
ஏற்கனவே அரசாங்கத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, அவை அங்கீகரிக்கப்பட்டு, தற்போது
அவ்வேலிகளை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுவருவதாகக் குறிப்பிட்டதோடு,
நீர்ப்பாசனப் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கும் பொருட்டு பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தோடு
தொடர்புகொண்டு அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகக்
குறிப்பிட்டார்.
தொடர்ந்து
ஆலையடிவேம்பு பிரதேச கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பேசும்போது, தமது
கிராமங்களிலுள்ள வீதிகள் செப்பனிடப்படவேண்டியுள்ளமை, வடிகான்களைத் துப்பரவு செய்தல்
மற்றும் புதிய வடிகான்களை அமைத்தல், வீதிகளுக்குக் கொங்கிறீட் இடுதல், பல்தேவைக்
கட்டடங்களின் தேவைகள் என்பன குறித்து தமது வேண்டுகோள்களை நாடாளுமன்ற உறுப்பினரிடம்
முன்வைத்தனர்.
அத்துடன்
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் குறிப்பிடத்தக்களவில் பின்பற்றப்பட்டுவரும் பாரம்பரிய
நாட்டு வைத்திய சிகிச்சை நிலையங்கள் அழிந்துவிடாமல் தடுப்பது குறித்தும், அவற்றை
அபிவிருத்தி செய்து பக்கவிளைவற்ற மூலிகைச் சிகிச்சைகளைத் தடையின்றி மக்களுக்கு வழங்குவதற்கு
முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அங்கு
பிரஸ்தாபிக்கப்பட்டது.
No comments:
Post a Comment