Wednesday, 13 January 2016

ஆலையடிவேம்பில் முன்பள்ளி ஆசிரியைகளுக்கான கொடுப்பனவுகளும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளும் வழங்கிவைப்பு

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் உதவியோடு ஆலையடிவேம்பு பிரதேச முன்பள்ளி ஆசிரியைகளுக்கு மாதாந்தக் கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வும், கணவனை இழந்த விதவைகள் மற்றும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் வைபவமும்
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (13) காலை இடம்பெற்றன.

பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, கணக்காளர் கே.கேசகன், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சிபாயா றமீஸ் ஆகியோரும் கலந்துகொண்டு குறித்த கொடுப்பனவுகளையும் உதவிப் பொருட்களையும் வழங்கிவைத்தனர்.


முதலில் இடம்பெற்ற முன்பள்ளி ஆசிரியைகளுக்கு மாதாந்தக் கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வில் சிறுவர் செயலகத்தின் ‘லமா திரிய’ வேலைத்திட்டத்தின்கீழ் 13 ஆசிரியைகளுக்குக் கடந்த 2015 ஆம் வருடத்தின் ஜூன் தொடக்கம் டிசம்பர் வரை 6 மாதங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து இவ்வருடத்தின் மகளிர் விவகார அமைச்சின் விதவைகள் மற்றும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின்கீழ் நெல் குற்றி விற்றல், அரிசி வியாபாரம், காலை உணவு தயாரித்தல், மாவரைத்தல் மற்றும் கோழி வளர்ப்பு என்பவற்றைத் தமது வாழ்வாதாரத் தொழில்களாகக் கொண்ட 13 பயனாளிகளுக்கு தொழிலுக்கான இயந்திரங்களும், உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களும் அங்கு வழங்கிவைக்கப்பட்டன.






No comments: