Thursday, 10 December 2015

ஆலையடிவேம்பு பிரதேச வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் - பிரதேச செயலாளர் கோரிக்கை

பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றுவிட்டால் அரச தொழிலொன்று எவ்வாறேனும் கிடைத்துவிடும் என்ற மனோநிலை இக்காலத் தமிழ் இளைஞர்களிடம் இப்போது இல்லை. இதற்குக் காரணம் கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளாலும் அச்சுறுத்தல்களாலும் படித்த தமிழ் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்புக்களைத் தேடி வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தது மட்டுமல்லாது எஞ்சியிருந்தவர்களில் குறிப்பிடத்தக்க சிலருக்கே போட்டிப்பரீட்சைகளின் ஊடாக அரச தொழில்கள் வழங்கப்பட்டதுமாகுமென பனங்காடு இணையத்தளத்துக்குக் கருத்துத் தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தெரிவித்தார்.




எதிர்வரும் டிசம்பர் 18, 19 ஆந் திகதிகளில் அம்பாறை மாவட்டத்தில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற மற்றும் உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகளைப் பூர்த்திசெய்த தொழிலற்ற இளைஞர், யுவதிகளை அவர்களது கல்வித் தகைமைகளுக்கேற்ற தொழில்வாய்ப்புக்களில் உள்வாங்கிக்கொள்ளும் பொருட்டு அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடாத்தப்படவுள்ள மாபெரும் தொழில் பேட்டை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அரசாங்கத்தினால் செய்யப்பட்டதைப்போன்று வேலையற்ற பல ஆயிரம் பட்டதாரிகளை ஒரே தடவையில் அரச சேவைகளில் உள்வாங்கக்கூடிய நிலைமை எதிர்காலத்தில் குறைவாகவே காணப்படுகின்றது. அதனாலேயே தற்போதைய அரசாங்கம் இவ்வாறான திட்டங்களை ஒவ்வொரு மாவட்ட ரீதியாகவும் முன்னெடுத்து அதனூடாக வேலையற்ற இளைஞர், யுவதிகள் தமது கல்வித் தகைமைகளுக்கேற்ற தொழில்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திவருவதாகத் தெரிவித்தார்.

குறித்த தொழிற்பேட்டை தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தொழில் அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம், சர்வதேசத் தொழில் அமைப்பு மற்றும் அம்பாறை மாவட்ட செயலகத்தோடு இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு அம்பாறை மாவட்டத்தில் தூரப் பிரதேசங்களில் வாழும் இளைஞர், யுவதிகளின் பங்குபற்றுதலைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் டிசம்பர் 18 (வெள்ளி) மற்றும் 19 (சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், இலங்கையில் பிரசித்திபெற்ற உற்பத்தி, விற்பனை, சந்தைப்படுத்தல், காப்புறுதி, மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் இத்தொழிற்பேட்டைக்கு வருகைதரவுள்ளதுடன், நேர்முகப்பரீட்சைகள் அங்கேயே நடாத்தப்பட்டு தகுதியானோர் வெற்றிடமாகவுள்ள பதவிகளுக்கு இணைத்துக்கொள்ளப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் தொழில் வழிகாட்டல் சேவைகள், தொழிற்பயிற்சி நிறுவனங்களால் வழங்கப்படும் கற்கை நெறிகள் தொடர்பாக அறிவூட்டல் மற்றும் பயிற்சிநெறிகளுக்கு பயிலுனர்களை இணைத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் அங்கு இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இத்தொழிற்பேட்டையில் கலந்துகொள்ளவுள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் தமது தாய்மொழியிலேயே தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் அங்கு செய்யப்பட்டுவருவதாகவும், ஆலையடிவேம்பு போன்ற தமிழ் பிரதேசங்களில் வாழ்கின்ற வேலையற்ற பட்டதாரிகளும் டிப்ளோமாதாரிகளும் மொழிப் பிரச்சனையைக் காரணங்காட்டி எந்தநிலையிலும் இச்சந்தர்ப்பத்தைத் தவறவிடவேண்டாமெனவும் பிரதேச செயலாளர் கேட்டுக்கொண்டதோடு, இவை தொடர்பான மேலதிக விபரங்களை ஆலையடிவேம்பு பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உதவியாளர் ஏ.எல்.தமீம் அவர்களை 077 3408626 என்ற இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியுமனக் குறிப்பிட்டதோடு, தேசிய அடையாள அட்டை, சுயவிபரக்கோவை மற்றும் அனைத்து கல்விச் சான்றிதழ்களுடனும் குறித்த தொழிற்பேட்டையில் கலந்துகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.



No comments: