Wednesday, 30 December 2015

கௌரவிக்கும் நிகழ்வு



ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றி இவ்வருடத்தில் (2015) இடமாற்றம் பெற்று வேறு அரச அலுவலகங்களுக்குச் சென்ற மற்றும் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களின் சேவைகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் ஆண்டிறுதி விழாவும் இன்று (29) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.


பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வுகளை அதன் தலைவரும் பிரதேச செயலாளருமான வி.ஜெகதீசன் தலைமைதாங்கி நடாத்தினார்.




மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்தோடு ஆரம்பமான வைபவங்களை பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் செயலாளரும் மேலதிக மாவட்டப் பதிவாளருமான எம்.பிரதீப் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.சுகிர்தகுமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முதலில் பிரதேச செயலாளரின் தலைமையுரையும், அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அக்கரைப்பற்று ‘ஜெயாலயா’ இசைக்குழுவின் இன்னிசை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதில் குறித்த இசைக்குழுவின் இசைக்கலைஞர்களோடு இணைந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் உள்ளிட்ட செயலக உத்தியோகத்தர்களின் வேடிக்கை, வினோத, பாடல் நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

இதன்போது ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு ஆற்றிவரும் அளப்பரிய  சேவைகளைப் பாராட்டி பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனை பிரதேச செயலக நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.

அதனைத்தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வேறு அரச அலுவலகங்களுக்குப் இடமாற்றம் பெற்றுச்சென்ற ஒன்பது உத்தியோகத்தர்களும், இவ்வருடத்தோடு தமது சேவைகளிலிருந்து ஓய்வுபெற்ற மூன்று உத்தியோகத்தர்களும் வாழ்த்துப்பா மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களின் ஏற்புரைகளும், அதிதிகளின் உரைகளும், சிற்றுண்டி மற்றும் மதியபோசன விருந்துபசாரம் என்பனவும் அங்கு இடம்பெற்றிருந்தன.

No comments: