இலங்கை
முழுவதும் கடந்த நவம்பர், 25 முதல் இம்மாதம் 10 ஆந்திகதி வரை
முன்னெடுக்கப்பட்டுவரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் தேசிய
வேலைத்திட்டங்களுக்கு அமைய MTV ஊடக வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட
விழிப்புணர்வு வைபவமொன்று இன்று (09) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர்
கூடத்தில் இடம்பெற்றது.
சக்தி
தொலைக்காட்சியின் ஊடகப் பணிப்பாளர் கே.மயூரன் தலைமையில் பெண்களின் சமத்துவம், பாதுகாப்பு
மற்றும் வலுவூட்டலை நோக்காகக் கொண்ட மகளிர் அரண் ஒன்றை ஒன்றிணைந்து உருவாக்குவோம் என்ற
கருப்பொருளுடன் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஆலையடிவேம்பு பிரதேச
செயலாளர் வி.ஜெகதீசனும், சட்ட ரீதியான தகவல்களை வழங்கும்வகையில் இலங்கை சட்ட உதவி
ஆணைக்குழுவிலிருந்து சட்டத்தரணி திருமதி. கலைவாசனாவும், பெண்களின் உரிமைகள்
மற்றும் சட்ட உதவிகள் தொடர்பான உதவிகளை வழங்கும்பொருட்டு மனித உரிமைகள்
இல்லத்திலிருந்து சட்டத்தரணி திருமதி. நிதர்சினி விஜிதனும், ஆலையடிவேம்பு பிரதேச
செயலக மகளிர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குப் பொறுப்பான பெண்கள் அபிவிருத்தி
உத்தியோகத்தர் திருமதி. சிபாயா றமீஸும் வருகைதந்திருந்ததுடன், நிகழ்வில்
கலந்துகொள்ளும்பொருட்டு அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர்
விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி திருமதி. இந்திராணி யாப்பாவும், ஆலையடிவேம்பு
பிரதேசத்தில் பெண்களின் சமத்துவம் மற்றும் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துவரும்
அரசுசாரா நிறுவனமான பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் பணியாளர்களும், பிரதேச மாதர்
சங்கங்களின் உறுப்பினர்களும், ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், அக்கரைப்பற்று
பொலிசாரும், ஏற்பாட்டாளர்களாக MTV ஊடக வலையமைப்பின் உத்தியோகத்தர்களும்
வருகைதந்திருந்தனர்.
நிகழ்வை
ஆரம்பித்து உரையாற்றிய சக்தி தொலைக்காட்சியின் ஊடகப் பணிப்பாளர் கே.மயூரன்,
பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் தேசிய வேலைத்திட்டங்களின் பிரதான
பங்காளரான MTV ஊடக வலையமைப்பினால் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும்
இவ்வாறான விழிப்புணர்வுகளை வழங்கும் நிகழ்வுகளை அதன் துறைசார்ந்த சட்ட
வல்லுனர்களின் உதவியோடு தாம் முன்னெடுத்துவருவதன் ஒரு அங்கமாகவே ஆலையடிவேம்பு
பிரதேசத்தில் இன்று இந்த நிகழ்வை நடாத்துவதாகக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில்
பேசிய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும்
தேசிய வேலைத்திட்டங்களில் பங்கெடுத்துள்ள MTV ஊடக வலையமைப்பினால் கடந்த ஆகஸ்ட்
மாதத்தில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய போதைப்பொருள் தடுப்பு
மாத வேலைத்திட்டங்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்ததோடு, இலங்கையில் மிக
முக்கியமான செய்திகளை வழங்கிவருகின்ற ஒரு பிரதான ஊடகம் என்ற நிலையையும் தாண்டி
சமுக அக்கறையோடு சக்தி தொலைக்காட்சியினால் தமது பிரதேசத்தில் மீண்டும் முன்னெடுக்கப்படுகின்ற
இன்றைய நிகழ்வு தொடர்பாக அதன் ஊழியர்களுக்குத் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும்
தெரிவித்தார்.
அடுத்து
பேசிய சட்டத்தரணி திருமதி. கலைவாசனா, குறிப்பாக எமது தமிழ் சமூகங்களில் இன்று
பெண்கள் எதிர்கொண்டுவரும் வன்முறைகளையும் துஷ்பிரயோகங்களையும் விரிவாகக் குறிப்பிட்டதோடு,
அவ்வாறான குற்றங்களுக்கு எதிராக முறைப்பாடுகளைச் செய்யவோ, நீதி பெறுவதற்கோ
துணிவற்றவர்களாகவும் தமது குடும்பத்தை முன்னேற்றவேண்டுமென்ற ஒரே எண்ணத்தோடு
தமக்கெதிராக நிகழும் எல்லாக் கொடுமைகளையும் தாங்கிக்கொள்ளப் பெண்கள் பழகிக்கொண்டுள்ளதாகவும்
குறிப்பிட்டதோடு, இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவால் இவ்வாறு பாதிப்புக்குள்ளாகும்
பெண்களுக்காக வழங்கப்பட்டுவரும் இலவச சட்ட உதவிகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து
பேசிய மனித உரிமைகள் இல்ல சட்டத்தரணி திருமதி. நிதர்சினி விஜிதன், எமது
சமுகங்களில் வாழும் பெண்கள் தமது அடிப்படை உரிமைகளைக்கூட அறிந்திராதநிலையில்
உள்ளதாகவும், தங்களுக்கு எதிராக வன்முறைகள் பிரயோகிக்கப்படும்போது அவற்றை அன்றாட
வாழ்க்கையின் ஒரு சம்பவமாக மட்டும் எண்ணிக்கொண்டு தம்மைத்தாமே தேற்றிக்கொள்ளும்
மனநிலையோடு வாழ்வதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு பெண்களின் உரிமைகளைப்
பாதுகாக்கும்பொருட்டு மனித உரிமைகள் இல்லம் முன்னெடுத்துவரும் சட்ட உதவிகள் குறித்தும்
அவர் அங்கு தெளிவுபடுத்தினார்.
அடுத்து
அங்கு உரையாற்றிய ஆலையடிவேம்பு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்
திருமதி. சிபாயா றமீஸ், இப்பிரதேசத்தில் வாழும் பெண்களின் உள, உடல் சுகாதார
அபிவிருத்தி தொடர்பில் பிரதேச செயலாளரின் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச
செயலகத்தினால் கிராமமட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள்
தொடர்பாகக் குறிப்பிட்டதுடன், குடும்ப வன்முறைகளால் துன்புறுத்தப்படும்
பெண்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனமான
பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் உதவியோடு மேற்கொண்டுவரும் உதவிகள் குறித்தும், தமது
வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் பிரதேச செயலகத்திற்குக் குறித்த நிறுவனம்
சிறப்பான ஆதரவுகளைத் தொடர்ச்சியாக வழங்கிவருவதாகவும் குறிப்பிட்டார்.
நிகழ்வில்
இறுதியாகப் பேசிய அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர்
விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி திருமதி. இந்திராணி யாப்பா, கடந்தகாலங்களில்
பெண்கள் தங்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள் தொடர்பாகத் தமது பிரிவில்
முறைப்பாடுகளைச் செய்வதில் சிங்கள மொழி தெரியாமை ஒரு பிரச்சனையாகக் காணப்பட்டதாகத்
தெரிவித்தார். ஆயினும் அண்மைக்காலத்தில் பொலிஸ் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பின்போது
பெருமளவு தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் உள்வாங்கப்பட்டு அக்கரைப்பற்று உள்ளிட்ட
பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது எவ்விதத் தயக்கமுமில்லாது
பெண்கள் தமிழிலேயே தமது முறைப்பாடுகளைப் பதிவுசெய்ய முடியுமெனவும் குறிப்பிட்டார்.
அத்தோடு பெண்கள் பொலிஸ் நிலையத்துக்கு வரத் தயங்குவதால் அவர்களுக்கு எதிரான
குற்றங்கள் ஒருபோதும் குறைவடையாதெனவும், மாறாக அது அவற்றுக்கு ஒருவித மறைமுக
அங்கீகாரத்தை வழங்குவதாகவே அமையும் எனவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment