Tuesday, 15 December 2015

ஆலையடிவேம்பில் வீடமைப்புக் கடனும் சீமெந்துப் பொதிகளும் வழங்கிவைப்பு

வீடமைப்பு மற்று நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பணிப்புரையின் அடிப்படையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சம்பத் செவன வேலைத்திட்டத்தின்கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்கு வீடமைப்புக்காகத் தலா 10 சீமெந்து பக்கற்றுகளை மானிய அடிப்படையில் வழங்கிவைக்கும் நிகழ்வும், வீடமைப்புக் கடன்களுக்கான காசோலைகளை வழங்கும் வைபவமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (16) காலை இடம்பெற்றன.


ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வினைத் தொழில்நுட்ப உதவியாளர் என்.சுதர்சன் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வுகளுக்கு அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரனின் மாவட்ட இணைப்பாளரும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.காளிதாசன், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை நகரக் காரியாலய முகாமையாளர் ஏ.ஏ.அஸீஸ், பிரதேச செயலகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், திவிநெகும திணைக்களத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கான தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.


மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த வைபவங்களுக்குத் தலைமைதாங்கி உரையாற்றிய பிரதேச செயலாளர், தலா ஒரு இலட்சம் ரூபாய்கள் வீதம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இதுகாலவரையில் தன்னால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள வீடமைப்புக் கடன்களைப் பெற்றுக்கொண்டவர்கள் மேலதிக பங்களிப்புடன் தமது வீடுகளின் திருத்தவேலைகளை விரைவாகப் பூர்த்திசெய்து முடித்துள்ளதுடன் அந்த வீடுகள் சம்பிரதாயபூர்வமாக விரைவில் அவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் அம்பாறை மாவட்டத்திலேயே வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிகளை விரைவாக முடித்துள்ள பிரதேசம் என்ற பெருமையை இதன்மூலம் எமது ஆலையடிவேம்பு பிரதேசம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்து உரையாற்றிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை நகரக் காரியாலய முகாமையாளர், ஒரு சந்தர்ப்பத்தில் வீடமைப்பு அமைச்சின் குறித்த வேலைத்திட்டங்கள் ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கு வழங்கப்படமுடியாத நிலை காணப்பட்டது. எனினும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் அமைச்சின் அதிகாரிகளிடம் கடுமையாக வலியுறுத்தி இவ்வுதவிகளை ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் பெற்றுக்கொள்ளக் காரணமாக இருந்ததாரெனக் குறிப்பிட்டதுடன், கடனைப் பெற்றுக்கொள்ளும் வறிய மக்களின் சுமையைக் குறைக்கும்வகையில் மிகக்குறைந்த வருடாந்த வட்டிவீதமான 3.5% இற்கு மாதாந்தத் தவணை அடிப்படையில் மீளச்செலுத்தும்வகையில் குறித்த கடன் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இறுதியாகப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரனின் மாவட்ட இணைப்பாளர் காளிதாசன், வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதம் பாராளுமன்றில் இடம்பெற்றுவரும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினரால் இவ்வைபவத்தில் கலந்துகொள்ள முடியாததையிட்டு அவர் சார்பாக மன்னிப்புக்கோரியதுடன், இதுபோன்ற நிவாரண உதவிகளில் பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் பிரதேச செயலகத்தோடு கைகோர்த்து செயற்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இரண்டு குடும்பங்களுக்கான வீடமைப்புக் கடனும், 40 வீடுகளுக்கு தலா 10 பொதிகள் அடங்கிய சீமெந்தும் அங்கு வழங்கிவைக்கப்பட்டன.
















No comments: