Thursday, 10 December 2015

ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட சேவை பெறுனர் பட்டயம் தொடர்பான பயிற்சி

அம்பாறை மாவட்ட செயலகத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சேவை பெறுனர் பட்டயம் (Citizen Charter) தயாரித்தல் தொடர்பான ஒருநாள் பயிற்சி ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (10) இடம்பெற்றது.


ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் மாவட்ட செயலக மொழிபெயர்ப்பாளர் எம்.சாஜஹானால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்பயிற்சிக்கு வளவாளராக திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் கலந்துகொண்டதுடன் பயிற்சி பெறுனர்களாக ஆலையடிவேம்பு பிரதேச கிராம உத்தியோகத்தர்களும், பிரதேச செயலகப் பிரிவுத் தலைவர்வர்களும், ஏனைய உத்தியோகத்தர்களும் பங்குபற்றியிருந்தனர்.


நிகழ்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், எமது பிரதேச செயலகத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவருகின்ற சேவைகள் மற்றும் அவற்றை அவர்கள் பெற்றுக்கொள்ளும் நடைமுறைகள் தொடர்பாக மக்களைத் தெளிவுபடுத்தவேண்டியதன் அவசியம் குறித்துப் பேசியதுடன், பொதுமக்களின் வீண் அலைச்சல்கள், நேர விரயங்களைத் தடுக்கவும் அவர்களை எமது செயலகத்தின் சேவைகள் குறித்துத் தெளிவுபடுத்தவும் மிக அவசியத் தேவையாகவுள்ள சேவை பெறுனர் பட்டயம் ஒன்றைத் தயாரித்துக் காட்சிப்படுத்தல் தொடர்பாக எமது உத்தியோகத்தர்கள் தெளிவான அறிவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இப்பயிற்சி மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், வளவாளராகக் கலந்துகொண்டுள்ள திருக்கோவில் பிரதேச செயலாளர் அரச நிருவாகத் துறையில் பரந்த அனுபவத்தோடு கூடிய திறமைசாலி என்பதாலேயே அரசாங்க அதிபர் அவரைத் தெரிவுசெய்து எமது உத்தியோகத்தர்களுக்கு இப்பயிற்சியை வழங்கச் சிபாரிசு செய்ததாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பயிற்சியை முன்னெடுத்த திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், முதலில் அரச அலுவலகங்களில் சேவை பெறுனர் பட்டயத்தின் தேவை தொடர்பாகவும் அதன் பிரிவுகள் மற்றும் உள்ளடக்கங்கள் தொடர்பாகவும் விரிவான தகவல்களை ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் பகிர்ந்துகொண்டார். அடுத்து பட்டயம் தயாரிப்பதற்குத் தேவையான தரவுகள், அவற்றைப் பெற்றுக்கொள்ளும் மூலங்கள், தயாரிக்கும் முறை, குறித்த பட்டயத்தைக் காட்சிப்படுத்தும் விதம் என்பன தொடர்பாக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சரியாக விளங்கிக்கொள்ளும் விதத்தில் விரிவான பயிற்சிகளை வழங்கினார்.

இப்பயிற்சியின்போது இடம்பெற்ற குழுவேலைகள் மற்றும் மல்டிமீடியா காட்சிப்படுத்தல்களை இலகுபடுத்துபவராக மாவட்ட செயலக மொழிபெயர்ப்பாளர் எம்.சாஜஹான் செயற்பட்டார்.














No comments: