Monday, 7 December 2015

ஆலையடிவேம்பில் முன்பள்ளி ஆசிரியைகளுக்கு நடாத்தப்பட்ட உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு பயிற்சி

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் அனுசரணையோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் முன்பள்ளி ஆசிரியைகளின் திறன்களை மேம்படுத்தும் நோக்கோடு நடாத்தப்பட்ட உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு பயிற்சி இன்று (07) காலை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ரவீந்திரனால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த பயிற்சிச் செயலமர்விற்கு அவரோடு இணைந்து வளவாளர்களாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் மற்றும் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், விசேட விருந்தினர்களாக பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், கணக்காளர் கே.கேசகன், திவிநெகும திணைக்களத்தின் பிரதேச தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா மற்றும் கிராம அலுவலர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர். பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளும்பொருட்டு ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பாலர் பாடசாலை ஆசிரியைகள் சுமார் 30 பேர் வருகைதந்திருந்தனர்.

மங்கல விளக்கேற்றலோடு ஆரம்பமான நிகழ்வுகளில் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.ராகுலரதியின் வரவேற்புரையைத் தொடர்ந்து ஆரம்பமான பயிற்சிகள் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு முழுநாள் அமர்வாக முன்னெடுக்கப்பட்டன. முதலாவது பயிற்சி ‘மனப்பாங்கு மாற்றம்’ என்ற கருப்பொருளை மையப்படுத்திப் பிரதேச செயலாளரால் முன்னெடுக்கப்பட்டதுடன் இரண்டாவது பயிற்சியில் ‘3R கருதுகோள்’ தொடர்பான கோட்பாடுகளை உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ரவீந்திரன் தெளிவுபடுத்தினார். இறுதியாக இடம்பெற்ற பயிற்சியில் ஜப்பானிய ‘5S கருதுகோள்’ தொடர்பில் முன்பள்ளி ஆசிரியைகளை அறிவூட்டும் அமர்வை பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் நடாத்திமுடித்தார்.

இந்நிகழ்வில் உற்பத்தித்திறன் அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வூட்டும் கையேடுகளும், பிரசுரங்களும் முன்பள்ளி ஆசிரியைகளுக்கு விநியோகிக்கப்பட்டதுடன், பயிற்சிகள் யாவும் மாலை வேளையில் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சுபாஜினி கோபிநாத்தின் நன்றியுரையோடு நிறைவுபெற்றன.














No comments: