Friday, 4 December 2015

ஆலையடிவேம்பில் போஷாக்கிற்கான பிரதேசமட்ட செயற்பாட்டுக் குழு அமைப்பு

அபிவிருத்தி தொடர்பான அரசின் கொள்கைகளுக்கமைய சிறுவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர், யுவதிகளின் போஷாக்குமிக்க வாழ்க்கை முறையை முன்னேற்றமடையச் செய்தல் தொடர்பான சுதேச மருத்துவ அமைச்சின் கருத்திட்ட விதந்துரைப்புகளின் பிரகாரம் நாடு முழுவதும் பிரதேச செயலாளர் பிரிவு மட்டங்களில் போஷாக்கு மேம்பாட்டுக்கான செயற்பாட்டுக் குழுக்களை அமைக்கும் வேலைத்திட்டத்தின்கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கான குழு நேற்று (03) காலை பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் உருவாக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற குறித்த வைபவத்தை முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் ஏற்பாடு செய்திருந்ததுடன், பிரதேச செயலாளரின் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்களும், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் உத்தியோகத்தர்களும், திருக்கோவில் வலயக் கல்விப் பணிமனையின் உத்தியோகத்தர்களும், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கான உத்தியோகத்தர்கள் மற்றும் திவிநெகும திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்த குறித்த நிகழ்வில் மேற்படி போஷாக்கு மேம்பாட்டுக்கான செயற்பாட்டுக் குழுவொன்றை அமைப்பதன் அவசியம் தொடர்பான அரசின் யோசனையையும், அதற்கான தேவைப்பாடுகள் தொடர்பாகவும் பிரதேச செயலாளர் அங்கு தெளிவுபடுத்தினார்.

அங்கு கருத்துத் தெரிவித்த பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா குறித்த குழுவில் உள்ளடக்கப்படவேண்டிய அங்கத்தவர்கள் தொடர்பாகவும் அவர்களின் கடமைகள் தொடர்பாகவும் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கிராம உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மருத்துவமாதுக்கள் மற்றும் கிராமக்குழுத் தலைவர்களை உள்ளடக்கிய போஷாக்கு மேம்பாட்டுக்கான செயற்பாட்டுக் குழு தாபிக்கப்பட்டு அதன் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.









No comments: