ஆலையடிவேம்பு
பிரதேச செயலகத்தில் நீண்டகாலங்கள் கடமையாற்றி கடந்த ஜூலை மாதத்தில் தனது
சேவையிலிருந்து ஓய்வுபெற்ற சிரேஷ்ட கிராம உத்தியோகத்தர் பூபாலபிள்ளை
திருநாவுக்கரசு அவர்களுக்கான பிரயாவிடை வைபவம் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன்
தலைமையில் நேற்று (17) நண்பகல் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலகக் கிராம உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வைபவத்தில்
பிரதேச செயலாளருடன் பிரதேச செயலகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா,
கணக்காளர் கே.கேசகன், நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், கிராம
உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச, பதவிநிலை உதவியாளர் ஏ.எல்.எம்.பஸீல்
மற்றும் ஓய்வுபெற்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களுக்கான முன்னாள்
நிருவாக உத்தியோகத்தர் ஈ.குலசேகரன் உட்பட அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் கலந்து
சிறப்பித்திருந்தனர்.
ஓய்வுபெற்ற
சிரேஷ்ட கிராம உத்தியோகத்தர் பூபாலபிள்ளை திருநாவுக்கரசின் இல்லத்தில் மதியபோசன
விருந்துபசாரத்துடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனுடன்
கலந்துகொண்ட உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரும் அவரது 25 வருடகால அரசசேவை தொடர்பான
ஞாபகக் குறிப்புக்களை அங்கு பகிர்ந்துகொண்டதுடன், சக உத்தியோகத்தர்களுடன் அவர் பேணிவந்த
சுமுகமான உறவு தொடர்பாகவும், இறுதியாகக் கடமையாற்றிய ஆலையடிவேம்பு கிராமசேவகர்
பிரிவில் பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்த அரசின் அபிவிருத்தி
வேலைத்திட்டங்களில் அவர் ஆற்றிய பணிகள் தொடர்பாகவும் சிலாகித்துப் பேசினர்.
இறுதியாகக் கருத்துத் தெரிவித்த கிராம உத்தியோகத்தர் பூ.திருநாவுக்கரசு அவர்கள், தன்னோடு
கடமை புரிந்த கிராம உத்தியோகத்தர்கள் தனது சேவைக்காலத்தில் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு
நன்றி தெரிவித்ததோடு, தனக்கு அவ்வப்போது அறிவுரைகளை வழங்கி வழிகாட்டிய பிரதேச
செயலாளருக்கும் தன்னோடு தோழமை கொண்டுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற
சக உத்தியோகத்தர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
நிகழ்வின்
இறுதியில் கிராம உத்தியோகத்தர்களால் நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட தங்க மோதிரமொன்றை
அவர்களது சார்பில் பிரதேச செயலாளர் ஓய்வுபெற்ற சிரேஷ்ட கிராம உத்தியோகத்தர்
பூபாலபிள்ளை திருநாவுக்கரசு அவர்களுக்கு அணிவித்தார்.
No comments:
Post a Comment