Sunday, 6 December 2015

இடை விலகும் மாணவர்களுக்கு பெற்றோர் ,ஆசிரியரே காரணம்

இடை விலகும்   மாணவர்களுக்கு பெற்றோர் ,ஆசிரியரே காரணம் 

எங்கட ஊர்ல இருக்கிற பன்மூர் ஸ்கூல்ல படிக்கிற  பஸ்ஷன்க ஸ்கூலுக்கு போகாம கள்ள மொழிகிறதுக்கு முக்கிய காரணம் ரீச்சர் தான்


இவ்வாறு வேதனையுடனும் உருகத்துடனும் பன்மூர் பாடசாலையின் முன்னேற்றம் தொடர்பான அக்கறையுடனும் எதிர்பார்புடனும் தெரிவிக்கின்றார் லட்சுமன் கருனாநிதி


நுவரெலியா மாவட்டத்தின் ஹற்றன் பிரதேசத்திலுள்ள அப்பஹமுவ கோரளை பிரதேசத்தில் மாணவர்களின் கல்வி இடைவிலகல் தொடர்பில் உரையாடுவதற்காக இதமான பனி  மழைத்தூறல்களுக்கு மத்தியிலும் கால்கடுக்க நான்கு பேராக நடந்து சென்று கொண்டிருந்த போது வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஊர்மக்கள் நீங்கள் ஊடகவியாலாளர்களா ?
எங்கிருந்து வருகின்றீர்கள் ? என பல கேள்விகளை எம்பால் தொடராக கேட்ட வண்னமிருந்தனர்.



நடந்து சென்ற களைப்பும் தாகமும் பசியும் நண்பகல்  எம்மை வாட்டி வதைத்தாலும் நாம் யார் என்பதை அங்கிருந்த மக்களுக்கு  கூற வேண்டும்  என்பதுடன் எமது கேள்விக்கான பதில்கள் இவர்களிடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எம் மத்தியில் இருந்தால் எமது கால்கள் அடித்த அடியை வைக்க மறுத்து விட்டன.

 அதனால் அங்கேயே நின்று நாம் யார் என்பதையும் பாடசாலையில் கல்வியில் இடைவிலகிய மாணவர்கள் தொடர்பாக உங்களது பிரதேசத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்துள்ளோம் எனத்  தெரிவித்தோம்.

 உடனே வீதி திருத்தும் பனியில் ஈடுபட்டிருந்த 15ற்கும் மேற்பட்ட இளையர்கள் எம்மை சூழ்ந்து கொண்டு எம்முடன் கதைக்க ஆரம்பித்தனர்



உடனே அங்கிருந்த லட்சுமன் கருணாநிதி ”அப்பகமுவ கோரளை பிரதேசத்தில்  பன்மூர் தமிழ் வித்தியாலயம் எண்ட ஸ்கூல் இருக்கு  அந்த ஸ்கூல்ல அதிகமான பஸ்ஸங்க ஸ்கூலுக்கு போரவங்க இல்ல இதுக்கு முக்கிய காரணம் ஊவா மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 3000 ஆசிரியர்களில் சிலர் பன்மூர் பாடசாலையிலும் இருக்கிராங்க” அவங்க படிச்சிருப்பது ஓல் மட்டும்தான்
இவங்க எப்படி எங்கட பஸ்ஸங்களுக்கு படிச்சுக் கொடுப்பது.? 

நாம் கேட்ட கேள்விக்கு பதில் தெரிவிப்பார்கள் என எதிர்பார்த்த எமக்கு இவர்கள் எம்மிடம் கேட்ட கேள்வி எம்மையே நிலை தடுமாற வைத்தது

இதற்கான பதிலையோ காரணத்தினையோ சிந்திப்பதற்கு நேரம் கொடுக்காத அவர்கள் இங்கு நிற்கின்ற 15ற்கும் மேற்பட்ட நாம் அனைவருமே அதே ஸ்கூல்ல தான் ஓஎல் வரை படிச்சம் பிறகு ஹயிலன்ட் ஸ்கூல்ல ஏஎல் படிச்சம் நாங்க எங்கட ஸ்கூல்ல முன்னேற்ற வேணும் எண்டு நினைக்கிறம்

அதுக்கு அங்கிருக்கின்ற நிர்வாகம் தடையாக இருக்கின்றது.  கடந்த 8 வருடமாக பழைய மாணவர் சங்கத்தினையே இயங்க விடுவது இல்லை. எப்படி முன்னேற்றம் வரும் என்றார். 

இவ்வாறு மாணவர்களின் கல்வியில் ஏற்படும் பிரச்சினைகள்  தொடர்பில் உரையாடிக் கொண்டிருக்கும் போது குறிக்கிட்ட முருகேஸ் நானும் இந்த இஸ்கூல்ல ஓஎல் வாரை படிச்சிட்டு ஹயிலன்டில ஏயல் படிச்சன். பிறகு பேராதெனிய பல்கலைக்கழகத்தில பீ.ஏ முடிச்சனான்.

 , அது மட்டுமல்ல அமெரிக்காவின் நாசாவில் 03வருட பயிற்சியை முடிக்கிறதுக்கு இதே இஸ்கூல்ல படிச்ச அமிர்த குணராஜ் போயிருக்கின்றார். அதே போல பல பேர் அரசாங்க வேலை பார்க்கிறாங்கள்.

இது இப்படி இருக்கின்றபோது கடந்த எட்டு வருடமாக மட்டும்  ஏன் அதிகமான மாணவர்கள் இடை விலக வேண்டும்.  இங்க ஆசிரியர்களின் கற்பித்தல் திறமை போதாமல் உள்ளதோடு அவர்களுக்கான கல்வி அறிவும் போதாமல் உள்ளது.
  உதாரணமாக எமது பகுதியில் ஆறு வருடத்திற்கு முதல் கணித மேதையாக   இருந்து வந்த ஆசிரியர் இறந்ததன் பின்னர் இது வரைகாலமும் குறைந்த அளவிலான மாணவர்களே சித்தியடைந்து வருகின்றனர். இதற்கு  ஆசிரியர்களிடம்  சரியான  வழிகாட்டல் இல்லாமையே ஒரு காரணமாக அமைகின்றது

இங்கு அனேகமான மாணவர்கள் 09 முதல் -16  வரையான வயதுகளில்  இடைவிலகுவதற்கு பருவக்கோளாறு , காதல்மயம் , போதைக்கு அடைமையாதல் , மது போன்றனவும் காரணமாக அமைகின்றன என தமது மனதிலுள்ள ஆதங்கம் ,கவலை,  வேதனையினை எம்மிடம் வெளிப்படுத்திய போது எதிர்வரும் காலங்களில் தமது பிள்ளைகளுக்கான வாழ்வு , கல்வி சீராக்கப்பட்டு விடுமா ? என்ற எதிர்பார்ப்பு அவர்களின் கண்களில்  கேள்விக்கனையாக நின்றதை அவதானிக்க முடிந்தது.



இவர்களின் இந்த எதிர்பார்ப்பு இன்னும் இன்னும் எமக்கான தேடல்களை அதிகரிக்க வைத்தது.

இதனால் இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பன்மூர் தமிழ் வித்தியாலய அதிபர் ஆசிரியர்களை சந்தித்த போது அவர்கள் கூறியது எம்மைப் பல கோணத்தில் சிந்திக்க வைத்தது.

எங்கட பாடசாலையில படிக்கிற பிள்ளையள்ள இந்த வருடம் 10 பேர் இடை விலகி இருக்கிறாங்க. இதுக்குக் காரணம் பெற்றோருடைய அக்கறையின்மையே.

குறிப்பாக தாய் வெளிநாடு செல்வதால் தந்தை பிள்ளைகளை பராமரிப்பது கிடையாது. அவர்கள் வேறு திருமணம் செய்துவிடுவார்கள் இதனால் தமக்கு கீழுள்ள பிள்ளைகளை பராமரிப்பதற்காக பள்ளிக்கு வரும் பிள்ளைகளை நிறுத்தி விடுவாங்கள்.

அது மட்டுமன்றி பருவவயதை எய்தியவர்கள் பாலின ஈர்ப்பு, நவநாகரீக மோகம், மது , போதைவஸ்து போன்றவற்றுடன் வயதுக் கட்டுப்பாடற்ற நண்பர்களின் தொடர்பு ஏற்படுவதுடன் தமக்கு மேற்பட்டவர்கள்  நகர்ப்புறங்களுக்குச் சென்று உழைப்பதனால் அவர்களின் கைகளில் அபரிவிதமான பணப்புழக்கம் காணப்படுவதும் இவர்கள் பாடசாலைக் கல்வியை இடை நிறுத்துவதற்கு முக்கிய காரணமாக அமைவதாக தெரிவித்த அதிபர் தமது பாடசாலைக்கு 3ட ஆசிரியர்கள் தற்பொழுது வந்துள்ளார்கள். எனக்கு அவர்களை சரிசெய்வதா, பிள்ளைகளை வழிநடாத்துவதா என்ற குழப்பம் தினமும் இருந்துகொண்டிருக்கின்றது என்றார்.

இதனைக் கேட்டறிந்த எமக்கு 3 எல் என்றால்  பொதுமக்கள் குறிப்பிட்டது என்னவென வினாவத்  தோன்றியது .

 இது அவர்களின் கல்வித் திறமைக்கு வழங்கப்பட்ட பட்டமாக இருக்கலாம் என  எண்ணி 3 எல்  என்றால்  என்ன என்பதை கேட்டறியும் ஆவலைத் தூண்டியது. இதற்கான அர்த்தத்தை கேட்டபோது தன்னிலை மறந்து வெளிப்படையாக ஆனந்தத்தின் உச்சக்கட்டத்தில் சிரித்த அதிபர் இல்லை இல்லை இது அவங்கள் படித்துப் பெற்ற பட்டமில்ல. அவங்க படிச்சிருப்பது ஓல் மட்டும்தான். இவர்களை 5 ஆம் ஆண்டுக்கு மேற்பட்ட வகுப்புக்களுக்கே கற்பிக்க விட்டுள்ளது எமக்கு கவலையளிக்கின்றது.
ஆனா இவங்க இப்பதான் தங்களின் பாடத்திட்டத்துக்கான கல்வியைக் கற்றுக்கொள்வதற்கு பயிற்சி வகுப்புக்களுக்குச் சென்று வருகின்றார்கள்.

இவர்களை எல்லோரும் 3 எல் என்றே குறிப்பிடுவார்கள். இது நாங்க இவர்களுக்கு செய்யவேண்டிய சலுகைகள். லோண் வழங்கவேண்டும். கேட்கும் போதெல்லாம் லீவு கொடுக்கவேண்டும். பாடங்களை கற்பிக்கும் நேரங்களில் அவர்கள் போணில் லவ் பண்ண இடமளிக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் எதிர்பார்ப்பு.

ஏனென்றால் இவர்கள் அரசாங்க உத்தியோகத்தர்களாம். இதையெல்லாம் இவர்களுக்கு செய்வதற்கு ஒரு அதிபராக இருந்து எம்மால் இடமளிக்க முடியாது. எங்களது பாடசாலையில் 39ஆசிரியர்கள் இருக்கின்றார்கள்.
 அவர்களில் 4 பேர் பயிற்சி ஆசிரியர்கள், 4 உதவி ஆசிரியரகளுடன் 31 நிரந்தர ஆசிரியர்கள் மாத்திரமே இருக்கின்றார்கள். இங்கு தரம் 1 முதல் 11 வரையான வகுப்புக்களில் 545 மாணவர்கள் கற்கின்றார்கள்.

இவர்களை வழி நடாத்துவதற்கே நேரம் போதாதிருக்கின்ற போது ஆசிரியர்களையும் வழிநடாத்துவது என்பது சிரமமாகவே உள்ளது. இதுவும் மாணவர்கள் இடைவிலகுவதற்கு காரணமாக அமைந்துவிடுகின்றது என்பது கவலைக்கிடமான விடயமாகவுள்ளது.

அதுமட்டுமன்றி இங்குள்ள மாணவர்களின் பெற்றோர் அவர்களின் கல்வி தொடர்பில் பெரிதும் கரிசனை எடுத்துக்கொள்வதில்லை. தாம் கொழுத்து பறிக்கப் போவதற்காக பிள்ளைகள் மீது அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. அத்துடன் தமது தேவைகளுக்காகவும் வீட்டிலுள்ள வேலைகளைச் செய்வதற்காகவும் ஏனைய பிள்ளைகளைப் பராமரிப்பதற்காகவும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தினை வீணடிக்கின்றோம் என்பது கூட தெரியாமல் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தி விடுகின்றனர். எனவே பிள்ளைகள் இடைவிலகுவதற்கான காரணம் பெற்றோரிலும் ஆசிரியர்களிலும் சமூகத்திலும் தங்கியுள்ளது.

அத்தோடு தமது வீடுகளுக்கு அருகில் தங்கியுள்ளவர்கள் கொழும்பு காலி, கம்பளை போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு சென்றுவிட்டு வீடுதிரும்பி வரும்போது நவநாகரீக பொருட்களுடன் வந்து சுற்றித்திரிவதைப் பார்க்கின்ற மாணவர்கள் தாமும் உழைத்து தமக்குத் தேவையானவற்றை பெற்றுக்கொள்ளவேண்டும் எனக்கருதி பாடசாலையைிட்டு இடைவிலகிச் செல்கின்றனர்.

நான் எமது மாணவர்களுக்காக பன்நாட்டு உதவிகள் மூலம் சலுகைகளைத் தேடிப் பெற்றுக்கொடுத்து வருகின்றேன்.   காரணம் இடைவிலகல் என்பது எனது பாடசாலையில் இருக்கக் கூடாது என்பதற்காக  பல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.

உதாரணமாக சொல்லப்போனால் எனது மாணவர்களுக்குத் தேவையான சப்பாத்துக்கள், காலுறைகளை இலவசமாகப் பெற்றுக்கொடுத்துள்ளேன். இருப்பினும் எதுவுமே சாத்தியமானதாக இருக்கவில்லை என கவலையுடன் தெரிவிக்கின்றார் பன்மூர் தமிழ் வித்தியாலய அதிபர் திருமதி. பி. குமாரசிறி.

ஒவ்வொருவருக்கும் பல்வேறுபட்ட விதங்களில் இவ்வாறு பல்வேறு பட்டவர்களை குறையாகக் கூறுவது சரியானதாகவோ அல்லது தவறானதாகவோ பார்க்கவேண்டியது எமது கடமையல்ல. ஆனால் இந்த மாணவர்கள் இடைவிலகுவதற்கு காரணம் குற்றங்களோ அல்லது பெற்றோரோ என்பதை விட கல்வியை ஊக்கத்துடன் தொடரவைக்க மனிதர்களாக , பொதுமக்களாக சிந்திக்கவேண்டியது அவசிய தேவையாவவே உள்ளது.


எனவே இந்த தேவையை நிவர்த்தி செய்வார்களா? அல்லது அதனை தடுப்பதற்கான முன்னேற்றகரமான செயற்பாடுகள் ஏதாவது இந்தக் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எம்மத்தியில் ஏற்பட்டுள்ளதை பூர்த்திசெய்யும் பொருட்டு அப்பகுதியிலுள்ள அப்பகமுவ கோரளை பகுதியின் 319 ஈ பிரிவு கிராமசேவகர் உதயகுமாரை  சந்தித்து கேட்டபோது அவர் கூறிய கருத்துக்கள் எம்மையே சிந்திக்க வைத்துள்ளன.

இப்பகுதியில் பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்களில் அனேகமானவர்கள் பொருளாதாரத்தை குற்றம் சாட்டுவது தவறான ஒன்றாகவே இருக்கின்றது.
 
இங்குள்ள ஒருசிலரைத் தவிர ஏனையவர்களுக்கு கல்வி மட்டத்திலுள்ள போதிய அறிவின்மையும் சரியான வழிகாட்டல் இன்மையுமே காரணமாக இருக்கின்றது.

அதுமட்டுமன்றி இங்கிருக்கின்ற பெற்றோர்கள்  ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி கொழுந்து பறிக்க தோட்ட வேலைகளுக்கு சென்றுவிட்டு திரும்பி வீடு வந்ததும் இருவரும் ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

 இதனால் அதனை பார்க்கும் இவர்களின் பிள்ளைகளும் அவர்களின் நடவடிக்கையினைப்   பார்த்து சிறுவயது முதல் மது அருந்த தூட்டப்பட்டு பழக்கப்படுவதுடன் சமுக சீர்கேடான பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொள்கின்றனர்
இது அவர்களின்  கல்வியை முற்று முளுதாக பாதிக்கின்றது. இதுவும் மாணவர்களின் இடை விலகலுக்கு காரணமாக அமைவதாக  சுட்டிக்காட்டப்படுகின்றது.

அது மட்டுமன்றி சிறந்த கல்வி தரப்படுத்தல் நிலையில் ஆசிரியர்கள் இல்லாததும் இதற்கொரு முக்கிய காரணமாக அமைகின்றது.
 அவர்கள் தமக்கான கல்வியினை தாமே சிறந்த முறையில் கற்றுக் கொள்ளாத போதும் தாம் கற்பிக்கும் மாணவர்களுக்கு எவ்வாறு கல்வியினை கற்றுக் கொடுக்கப் போகின்றார்கள் என்பது மிகப்பெரும் கோள்விக் குறியாக இருக்கின்ற நிலையில் இவர்க்ளிடம் கல்வியை கற்பதற்கு விருப்பமின்றி பாடசாலைக்கு மாணவர்கள் வரமறுத்து தொடர்சியாக இடைவிலகுவதற்குக் காரணமாக அமைகின்றது.

மேலும் இங்கிருக்கின்ற மாணவர்கள் ஒவ்வெருவரும் தமக்கான கல்வியை தகுந்த முறையிலும் தரமான முறையிலும் பெற்றுக் கொள்ள விரும்பாதது  தாம் பெற்றோர் மீதும் தம்மை சூழந்துள்ள தமது  சமுகத்தின் மீதும் குற்றம் சாட்டி விட்டு தமது கல்வியை இடை நிறுத்தி வருகின்றனர் எனக் கூறிய கிராம சேவகர் இந்த மாணவர்களின் இடை விலகலைத்தடுக்க தம்மால் ஆன முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது பயனளிக்கவில்லை என மிகுந்த உருக்கத்துடனும் கவலையுடனும் தெரிவித்தது எம்மை சிந்திக்க வைத்ததுடன் எமக்கான தேடலினையும் அதிகரிக்கவே செய்துள்ளது.

கல்வி என்பது இலங்கையில் முன்னிலை பெற்று வருவதுடன் அனைத்து மாகாணங்களிலும் மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை செலுத்தி கற்றுவருகின்ற இன்றைய காலகட்டத்தில் ஹற்றன் பிரதேசம் மட்டும் ஏன் கல்வியில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது? இங்கிருக்கின்ற மாணவர்களே அதிகமாக பாடசாலையினை விட்டு இடைவிலகி வருகின்றனர்.  இதற்கான காரணம் என்ன? மக்களே! சிந்தித்துப் பாருங்கள்… உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகின்றது..? உங்களது குழந்தைகளின் கனவுகள் சிதறடிக்கப்படுமா? இங்கிருக்கும் அரசியல் தலைவர்ளுக்கு மக்களின் வாக்கு மட்டுமே போதுமா? இல்லை சிறந்த மக்களும் சிறப்பான எதிர்கால  இளம் சந்ததியினரும் தேவைதான? சிந்திப்போம்….




”எனக்கு படிக்க சரியான விருப்பம்”  “நான் இந்த வருடம் ஓஎல் பரீட்சை எழுதவேண்டியவன்  ஆனால் பரீட்சை எழுதவில்லை என்கின்றான் கண்ணிர் மல்க சபோசன்

ஏன் தம்பி பரீட்சை எழுதவில்லை படிப்பதற்கான வசதிகள் இல்லையா என கேட்ட போது

ஆம் எனக்கு படிப்பதற்கான வசதி குறைவுதான்  ஆனாலும் எனது பெற்றோர் என்னை மிக கஸ்டப்பட்டு படிக்க வைச்சான்க இப்ப என்கட அதிபர் நான் பரிட்சை எழுதுவற்கு விண்ணப்பிப்பதற்க்கு கையொப்பம் இட மறுத்துவிட்டர்.

 அது எனக்கு மட்டுமல்ல என்னுடன் சேர்த்து ஆறு பேருக்கு இவ்வாறு செய்துவிட்டார். இதனால் எனது கல்வி இடைநடுவில் சிதறடிக்கப்பட்டு விட்டது.  இதற்கான காரணம் என்ன என வினவிய போது அது அதிபருக்கு மட்டுமே தெரியும் எனக்கு தெரியாது என உருக்கமாக எதிர்பார்ப்புக்கள் நிறைந்த கண்களுடனும் எம்மைப் பார்த்து தெரிவித்தான்.

இவர்களின் இந்த நிலையினை கேட்டுக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்த போது சமுக சேவகரை சந்திக்க வந்து நின்ற தினேஸ் பாபு என்பவரை சந்தித்துக் கதைத்தோம்.
 அப்போது அவர் கூறுகையில்- நான் ஒன்பதாம் ஆண்டுடன் எண்ட படிப்பை விட்டுட்டன் எங்கட அம்மாவுக்கு சரியான வருத்தம்


அவவ பார்க்கவே அப்பாவுக்கு நேரம் சரியாக இருந்தது இதால நான் படிப்ப விட்டிட்டு வேலைக்குப் போனாத்தான் சாப்பிடவும் அம்மாட மருந்து செலவ பார்க்கவும் முடியும் அதுக்காக பள்ளிக்கூடம் போகாம வேலைக்குப் போயிட்டன். அப்பா அம்மாவேட ஆஸ்பத்திரிக்கு திரியவே சரியா இருந்தது. எங்கட தம்பிய கவனிக்க யாருமில்லை. அவனும் தம்ம யாரும் கவனிக்க வில்லை எண்டு பள்ளிகூடத்துக்கு போகாமலே விட்டுட்டான்.   ஒருநாள் அப்பா  கண்டிட்டு பள்ளிக் கூடத்திற்கு கூட்டிட்டு போகும் போது அதிபர் சொன்னார் இவன் அறுப்பது நாளாக பள்ளிக்கூடம் வரவில்லை எண்டு. அப்பாவுக்கு என்ன செய்யிறது எண்டு தெரியாம போயிட்டு அவனுக்குகிட்ட படி படி எண்டு சொல்லிப்பார்த்தம், அடிச்சும் பார்த்தம்  ஆனா அவன் படிக்க மாட்டன் எண்ட்டுட்டான் ” இப்ப எங்களுக்கு படிப்பும் இல்லை அம்மாவும் இல்லை”

எங்காளால இதப்பற்ரி இப்ப யோசிச்சு கவலைப்படத்தான் முடியும் இனி எதுவும் செய்யவும் முடியாது. அதாலதான் எங்கட பெரியம்மாட பொம்பிள பிள்ளைகள் இரண்டு பேரை நான் படிப்பிக்கிறன். அவங்களுக்கு படிக்க விருப்பம். ஆனா அவங்களுக்கு வசதி இல்லை.

 இந்த நிலை இனி யாருக்கும் வரக்கூடாது எங்கட பிள்ளைகளையாவது சரியான கல்வியை படிக்க வேணும் படித்து நல்ல வேலைய பார்க்க வேணும்  எங்களப்போல கஸ்ரப்படக்கூடாது என்றார்.

இதை எல்லாம் கேட்கும் போது எமக்கு என்ன கூறுவது என தெரியாமல் எம் குழுவுடன் ஆலோசித்துக் கொண்டு சொன்றோம்.

அப்போது ஒரு மாணவன் விளையாடுவதை கண்டு பாடசாலை விடுமுறையாகையால் இவன் தனது உடலுக்கும் மூளைக்கும் தேவையான பயிற்சியினை விளையாட்டின் ஊடாக பெற்றுக் கொள்கின்றான் என எங்களுக்குள் கதைத்தவாறு அவனருகில் சென்று அவனுடன் கதைத்தால் எமது மனதுக்கு அமைதியாக இருக்கும் என அவனை நெருங்கி ’தம்பி’ எனக் கூப்பிட்டு விசாரித்த போது எமது அனைவர் கண்களிலும் இருந்து கண்ணீர் பனித்துளியாக கண்கள் கலங்கிச்செல்ல எம் மனதையும் நெருடி விட்டது

என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா ?ஆம் இது உண்மையாகவே ஆச்சரியமான விடயமே இந்தப் பையனின் கதையும் தான்.
 
  இவனுடைய பெயர் கனகவேல் சாந்தகுமார் வயதோ 11 இவன் தரம் 06ல் கற்க வேண்டியவன் ஆனால் கடந்த நான்கு மாதமாக பாடசாலைக்கு செல்வதில்லை காரணம் ஏன் எனக் கேட்டது ….

எங்கட அம்மா வெளிநாடு போயிட்டா அப்பா வேற கலியாணம் செய்திட்டார். நாங்கள் தாத்தா பாட்டி யோடதான் இருகின்றம். தாத்தாக்கு வயது 58 பாட்டிக்கு வயது 55 இவங்க கொழுந்து பறிக்க போயிடுவாங்க. என்ற இரண்டு தங்கச்சியையும் பார்கிறதுக்கு ஆக்கள் இல்லை. நான் தான் பார்க்க வேணும் அதால நான் பள்ளிக் கூடம் போறதில்லை எனக்கும் படிக்க விருப்பம் இல்லை நான் தங்கச்சி ஆக்கள அழாம நல்ல வடிவா பார்ப்பன் எனக்கு ரொட்டியும் சுடத்தெரியும்”


இவ்வாறு கூறியது எம்மை பிறமிப்பில் ஆழ்த்தியது எம் கைகளில் இருந்த பேனாக்கள் கை நழுவிச் சென்றது தெரியாமல் எம் மத்தியில் ஏற்பட்ட வேதனையும் தாக்கமும் பிறமிப்படைய வைத்துள்ளது
 

இலவசக்கல்வியினை எம் மாணவர்களுக்கு வழங்கும் எம் தாய்திருநாடான இலங்கைக்கு இந்த நிலை வேண்டுமா? இந்த நிலை ஏற்படக்காரணம் யார்? அதிகாரிகளின் குற்றமா? பெற்றோரின் குற்றமா? இல்லை கால்கள் கடுகடுக்க வீடு வீடாக வாக்குகளைக் கேட்டு திரிந்த  அரசியல் வாதிகளின் குற்றமா ? என்பதை புரியாத புதிராகவே உள்ளது.
 
 இந்த நிலை மாற்றப்பட வேண்டும் கல்வி மேலோங்க வேண்டும் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட வேண்டும் தரமான ஆசிரியர்கள் தரப்படுத்தல் ஊடாக நியமிக்கப்பட வேண்டும் இது மட்டுமன்றி மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டல் வழங்கப்பட வேண்டும் மாணவர்கள் ,பெற்றோர் இடத்தில் சரியான புரிந்துணர்வையும் கல்வி தொடர்பான விழிப்புணர்வுகளும் கல்வியின் மகத்துவமும் உணர்த்தப்பட வேண்டும் மாணவர்களிடத்தில் பொருளாதார  ஏற்றத்தாழ்வும் ஆசிரியர்களின் பொறுப்பு வாந்த தன்மையும் கட்டி எழுப்படுவதுடன் சிறுவர்கள் குழந்தைகளை பராமரிப்பது நிறுத்தப்படவேண்டும் இவை அனைத்தும் சிறப்பாக முன்னெடுக்கப்படுமானால்

இப் பிரச்சினைகளுக்கு முடிவுகள் சிறப்பாக அமையுமேன பிரதேச மக்கள் எதிர்பார்கின்றனர்





இவ் வாறான நடவடிக்கையினை யார் செய்வது என்பதை விடுத்து அனைவரும் ஒன்றினைந்து முயலும் போது மாணவர்களின் கல்வி இடைவிலகலை நிறுத்தி சிறந்த கல்வியை உருவாக்குவதுடன் அப்பிரதேசத்தினை தரமான பிரதேசமாகவும் மாற்றி அமைக்க முடியும்.

 எனவே இச் செயற்பாடுகளை உரிய நடவடிக்கைகளின் ஊடாக முன்னெடுக்க வேண்டு மென அப்பகுதி மக்களும் நலன் விரும்பிகளும் கேரிக்கை விடுத்துள்ளனர்


No comments: