Wednesday, 9 December 2015

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின வைபவங்கள்

அரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் நாடு முழுவதிலுமுள்ள அரச நிறுவனங்களில் அனுஸ்டிக்கப்படும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின வைபவங்களின் தொடர்ச்சியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிகழ்வுகள் இன்று (09) காலை 9.00 மணிக்கு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றன.

முதலில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சூழ்ந்திருக்க பிரதேச செயலாளர் தேசியக்கொடியை ஏற்றிவைத்ததுடன், தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அதனையடுத்து இலங்கைத் தேசத்திற்காக தம் இன்னுயிரை உவந்த தேசிய வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊழலுக்கு எதிராக அரச ஊழியர்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வில் மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப் உறுதிமொழியை வாசிக்க, பிரதேச செயலாளர் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களும் நெஞ்சுக்கு நேராகத் தமது கைகளை உயர்த்தி உறுதியெடுத்துக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் தொடர்பாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான விசேட உரையாற்றிய பிரதேச செயலாளர் தனது உரையில் தனியார் துறையினரோடு ஒப்பிடுகையில் அரச ஊழியர்களின் செயற்திறன் குறைவாகக் காணப்படுவதாலும், வரையறுக்கப்பட்டதும் நிருவாகக் கட்டுப்பாடுகள் அதிகமானதுமான கடமைகள் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாலும் ஒரு குறிப்பிட்ட மட்டத்துக்கு மேல் அவர்களால் செயற்படுவதற்கு அதிகாரம் அற்றவர்களாகக் காணப்படும் சூழலே அரச நிறுவனங்களில் இப்போது நிலவிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் இவற்றை விளங்கிக்கொள்ளமுடியாத பொதுமக்களும் ஏனைய வெளித்தரப்பினரும் கையூட்டல் வழங்கியாவது தமது வேலைகளை விரைவாக முடித்துவிடவேண்டுமென எண்ணுகின்றனர். இதை ஒரு சந்தர்ப்பமாக அரச ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்ள எண்ணும்போதே லஞ்சமும், ஊழலும் தோற்றம் பெறுகின்றன. அதுமட்டுமில்லாது ஒரு சில அரச ஊழியர்களின் இவ்வாறான செயற்பாடுகள் முழு நிறுவனத்தையும் பாதித்துவிடுவதாகவும் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில், ஒருவர் தனது வருமானத்துக்கும் மீறிய செலவுகளைச் செய்யமுனையும்போது மேலதிக வருமானமொன்றுக்காகத் தனது கடமைகளைத் துஷ்பிரயோகம் செய்து ஊழல் கலாசாரத்துக்குள் நுழைந்துவிடுவதாகக் குறிப்பிட்ட அவர், சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்து தொழிலிலிருந்து இடைநிறுத்தப்பட்டு அரச வரப்பிரசாதங்களை இழந்த சிலர் இன்று தாங்கள் வாழும் சமூகத்திலும் அங்கீகாரத்தை இழந்தவர்களாகக் காணப்படுவதாகவும் அங்கு குறிப்பிட்டார். அத்துடன் இலங்கையில் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை வழங்கியவாறு அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரித்ததுடன் தனது நல்லாட்சியில் அவர்களுக்கான சலுகைகளையும் அதிகரித்துள்ளது. ஆகவே இவற்றையெல்லாம் நாம் கவனத்திலெடுத்து இன்றைய நாளில் நாம் எடுத்துக்கொண்ட ஊழலுக்கெதிராக உறுதிமொழியை எம் சிந்தையில் நிறுத்தி மக்களுக்கு மேலும் அர்ப்பணிப்பான சேவையை வழங்க திடசங்கற்பம் பூணவேண்டுமெனவும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களைக் கேட்டுக்கொண்டார். 






No comments: