Monday, 19 March 2018

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டுத் தேசிய வாரத்தின் ஆரம்பநாள் நிகழ்வுகள்



இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சினால் நாடுதழுவிய ரீதியில் இம்மாதம் 19 - 22 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டுத் தேசிய வாரத்தின் முதல் நாளில் விசேடமாக அனுஸ்டிக்கப்படும் விளையாட்டுத்துறை மற்றும் உடல்நல மேம்பாட்டு அரச, கூட்டுத்தாபன உத்தியோகத்தர்களின் தினத்தைச் சிறப்பிக்கும்வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட வைபவமானது இன்று (19) காலை இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டுத் தேசிய வாரத்தின் முதல்நாள் நிகழ்வான விளையாட்டுத்துறை மற்றும் உடல்நல மேம்பாட்டு அரச, கூட்டுத்தாபன உத்தியோகத்தர்களின் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையில் அக்கரைப்பற்று ஜீனியஸ் (தனியார்) வைத்தியசாலையின் இயன் மருத்துவர் கே.ஹரன்ராஜின் பங்குபற்றுதலுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் முன்னெடுத்த விசேட நடைப்பவனி பிரதேச செயலக முன்றலிலிருந்து ஆரம்பித்து, சாகாம வீதியூடாக அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று அம்பாறை வீதிக்குத் திரும்பி, இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலய சந்தியை அடைந்து, அங்கிருந்து ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரி வீதியூடாக வம்மியடிச் சந்திக்குச் சென்று, பின் ஆலையடிவேம்பு வீதியூடாகப் பயணித்து மீண்டும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தை வந்தடைந்திருந்தது. இதன்போது உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி என்பவற்றின் நன்மைகள் குறித்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டத்தினை இயன் மருத்துவர் கே.ஹரன்ராஜ் முன்னெடுத்திருந்தார்.

குறித்த நடைபவனி ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரிக்கு அருகிலுள்ள தருமசங்கரி விளையாட்டு மைதானத்தை அடைந்ததும் அவரோடு பதவிநிலை உதவியாளர் கே.ஹேந்திரமூர்த்தியும் இணைந்து  மேற்கொண்ட சுமார் 15 நிமிடநேர உடற்பயிற்சியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஆண், பெண் உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்குபற்றியதோடு, பயிற்சியின் நிறைவில் இயற்கைப் போஷாக்குமிக்க குரக்கன் தானியத்தினால் தயாரிக்கப்பட்ட கஞ்சியானது உத்தியோகத்தர்களுக்குப் பரிமாறப்பட்டிருந்தது.

அடுத்து அங்கு இடம்பெற்ற பிரதேச செயலாளரின் விசேட உரையில் கருத்துத் தெரிவித்த அவர், இக்காலத்தில் கூட்டுக் குடும்பமாக அல்லாது கணவன், மனைவி, பிள்ளைகள் என்று தனித்து வாழும் எம்மவர்கள் மத்தியில் தங்களது குடும்பப் பொருளாதார முன்னேற்றத்தின் பொருட்டு குடும்பத் தலைவன் மட்டுமல்லாது மனைவியும் வேலைக்குச் செல்வதால் இயந்திர மயமான வாழ்க்கையை வாழ்ந்து அவர்களும் இயந்திரங்கள் போலாகிவிடுகின்றனர். இரவு பகல் பாராது ஓடியாடி உழைத்துச் சேமித்த பணத்தோடு நிதி நிறுவனங்களிலிருந்து கடன்களைப் பெற்று மாடி வீடு கட்டிக் குடியேறிய பின்னர் மாடிப் படிகளில் ஏறியிறங்க முடியாத அளவுக்கு உடல் பலமற்றவர்களாக மாறி விடுகின்றனர் என்று கூறினார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எமது வயதுகளில் எமது மூதாதையர்கள் கொண்டிருந்த உடல் பலம் இப்போது எம்மிடமோ, எமது குழந்தைகளிடமோ இல்லை. உடலை வருத்தி யாரும் இப்போது வேலை செய்ய விரும்புவதில்லை. உடல் வியர்ப்பதை இப்போதெல்லாம் அசௌகரியமாகக் கருதும் சமுதாயத்தில் வாழப் பழகிவிட்டோம். இப்போது சாதாரண ஒரு காய்ச்சலைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தி எமது உடலில் இல்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள், இறைச்சி வகைகளை நாம் உண்ணத்தொடங்கிய நாளிலிருந்து புற்றுநோய் நமது வேண்டாத விருந்தாளியாகி வீடுகளுக்குள் நுழைந்து நாம் வாழும் சமூகங்களின், எமது சந்ததிகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கின்றது. இந்தநிலையை உடனடியாக மாற்றிவிட முடியாதபோதும் படிப்படியாகவேனும் இல்லாதொழிப்பதற்கு உடற்பயிற்சிகளும் கடினமான உடல் உழைப்புக்களும் இன்றியமையாததாக அமைந்துள்ளது. இதனாலேயே கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் அரசாங்கத்தினால் விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டுத் தேசிய வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இயன் மருத்துவர் கே.ஹரன்ராஜ் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், மனிதர்கள் உணவை மருந்துபோல உண்ணவேண்டிய நிலை மறைந்து இன்று மருந்துகளை உணவு போல உண்ணவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இன்று எதற்கும் அவசரம். உணவு உண்பதா?, வேலைக்குச் செல்வதா?, குடும்பத்தின் தேவைகளைக் கவனித்துக் கொள்வதா? இப்படி எதையெடுத்தாலும் அவசரம், அவசரமென்று மனிதர்கள் மன இறுக்கம், விரக்தி, அளவுக்கதிகமான கோபம், சுய கட்டுப்பாடின்மை என்று மனித சமுதாயம் சீர் கேட்டுப் போய்க்கொண்டிருக்கின்றது. இந்த நிலையை மாற்ற இயன் மருத்துவத்தில் இடமிருக்கின்றது.

உடற்பயிற்சி செய்ய நேரமில்லாத இன்றைய அவசர மனிதர்களின் நிலைமைகளுக்கேற்றாற்போல் வேலை செய்கின்ற அலுவலகமாகட்டும், வேலைத்தலமாகட்டும் இப்படி எதுவாக இருந்தாலும் இருக்கின்ற இடத்திலிருந்தே சில நொடிகளில் உங்களது உடலுக்குப் பயிற்சிகளை வழங்கக்கூடிய மருத்துவ முறைகள் இயன் மருத்துவத்தில் இருக்கின்றன. இவைகளைக் கிரமமாகப் பின்பற்றி வந்தாலே நமது உடம்பில் சேரும் மேலதிகக் கொழுப்பு, குளுக்கோஸ் என்பவற்றைக் காலக்கிரமத்தில் குறைத்துவிடலாம் என்று கூறினார்.























No comments: