Thursday, 8 September 2016

புறோய்லர் எனும் அரக்கன்!

பிரேம்.....

வெறுமனே 40  நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடும் புறோய்லர் கோழிகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பயங்கரங்களை ஆராயும்போதே இன்றைய அவசர உலகில் எமது அன்றாட வாழ்வில் தவிர்க்கமுடியாத இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள இந்த உணவுப் பொருளால் ஒட்டுமொத்த மனித இனம் எதிர்நோக்கியுள்ள பேராபத்துக்கள் ஆதாரத்தோடு வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியுள்ளன.

இந்த புறோய்லர் கோழிகள் பண்ணைகளில் வளர்க்கப்படும்போது மனித உடலுக்கு ஆபத்தான டைலோசின் பொஸ்பேற், டினிடோல்மைட், டயமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன் - பி.சி.எஃப், டோக்சிலின் - ஈ.எஸ், குர்ராடோக்ஸ் - எம்.எஸ், நோவா சில்பிளஸ் போன்ற 12 விதமான இரசாயனங்கள்  கோழிகளுக்குக் கொடுக்கப்படும் உணவுகளோடு கலக்கப்படுவதோடு ஊசி மூலமும் ஏற்றப்படுகின்றன.

வெறும் 40 நாட்களுக்குள் புறோய்லர் கோழிகளை விற்பனைக்கு அனுப்பும் நோக்கிலேயே அவற்றுக்கு இவ்வாறான அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயோட்டிக் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கத்தால் கோழிகளுக்கு ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நோயைக்கூடக் குணப்படுத்தமுடியாமல் போவதோடு அதன் இறைச்சியை உண்ணும் மனிதர்களுக்கும் அந்த நோய்க்கூறுகள் கடத்தப்பட்டுகின்றன என்று CSE எனப்படும் இந்தியாவின் Centre for Science & Environment நிறுவனம் தெற்காசிய நாடுகளில் அண்மையில் நடாத்திய ஒரு விரிவான ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நோய்க்கூறுகள் ஆண்களின் விந்து உற்பத்தியைக் கட்டுப்படுத்தி உயிரணுக்களை அழிக்கிறன. இதனால் புறோய்லர் கோழிகளைத் தமது உணவோடு சேர்த்துக்கொள்ளும் ஒவ்வொரு திடகாத்திரமுள்ள ஆணும் தனக்குத் தெரியாமலேயே தனது ஆண்மைத் தன்மையை தினசரி இழந்துகொண்டிருக்கின்றான். உடலியல் பருவமாற்றங்களுக்கு உட்படும் பதின்ம வயதுள்ள ஒவ்வொரு ஆணும் இதனால் நேரடியாகப் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்து இந்த நோய்க்கூறுகள் பருவமடைந்த பெண்களின் கருப்பையை இலகுவாக ஊடுருவி அவர்களது மாதவிலக்கு சுழற்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி, அவை உண்டாகும் நாட்களில் அவர்களுக்குத் தாங்கொண்ணாத வலியையும், அளவுக்கதிகமான உதிரப்போக்கையும் உண்டாக்குகின்றன. தொடர்ச்சியாக இவ்வாறு நேர்வதால் கருப்பையின் சுவர்கள் பலவீனமடைந்து கருவைத்தாங்கி வளர்க்கக்கூடிய செயற்பாட்டை இழந்துவிடுவதால் கரு முட்டைகள் வீரியமின்மை, குழந்தை தங்காமை, கருச்சிதைவு என்பவை உண்டாகி மனித இனத்தின் சந்ததி விருத்தியையே கேள்விக்குறியாக்கிவிடுகின்றன. இவை வளர்ந்துவருகின்ற சிறுமிகளின் கருப்பையில் அதிக தாக்கத்தைச் செலுத்துவதால் இன்றைய காலகட்டத்தில் பத்து வயதுகளிலோ, அல்லது அதற்கு முன்போ சிறுமிகள் வயதுக்கு வந்துவிடுவது இன்று நமது வீட்டுக்கு வீடு நடந்துகொண்டிருக்கின்றது.

புறோய்லர் கோழிகளில் கொலஸ்ட்ரோலின் சேர்வை அதிகளவில் உள்ளது. இதை நாம் உண்ணும்போது நமது உடலில் தேவைக்கதிகமானதும், உடல் சுகாதாரத்துக்குப் பாதிப்புக்களை உண்டுபண்ணக்கூடியதுமான கொழுப்புச்சத்து அதிக அளவில் சேருகின்றது. இந்தக் கெட்ட கொழுப்பானது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி எமது உடலின் சமிபாட்டுத் தொகுதியில் பாதிப்பை உண்டாக்கிவிடுகின்றது. கொலஸ்ட்ரோல் அதிகரிப்பதால் அது இரத்த நாளங்களில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுவது மட்டுமல்லாது காலப்போக்கில் மாரடைப்பு ஏற்படவும் வழிவகுக்கின்றது.

தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரையில் 100ல் 65 பேருக்குக் கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதுடன், அங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் பொரித்த புறோய்லர் கோழி உணவுகளுக்காக ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை மீளவும் அதிக அளவில் பயன்படுத்தி வருவதால் குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளில் வாழ்ந்துவரும் மக்களுக்குக் கல்லீரல் கோளாறுகளின் தாக்கம் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் தொடர்ச்சியாகப் புறோய்லர் கோழி உணவுகளை உண்போர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கிவிடுவதாகவும், அதன் தொடர்ச்சியாகச் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் புற்றுநோய் உருவாவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.


மேலும் இதை விரும்பி உண்போரின் உடல் எலும்புகளில் இருக்கும் சத்துக்கள் முற்றிலும் அழிவடைவதோடு மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று இவற்றின் தொடர்ச்சியாக ஏற்படக்கூடிய வியாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.


குறிப்பாக இந்தியாவில் நமது தமிழர்கள் வாழும் நாமக்கல் மாவட்டத்தில் புறோய்லர் கோழி மற்றும் அவற்றின் முட்டைகளைத் தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக்கொண்ட மக்களுக்கு இப்போது புற்றுநோய் அதிகமாகப் பரவிவருவதையும் குறித்த ஆய்வறிக்கையில் அடையாளம் காட்டியுள்ள CSE நிறுவனம், நாமக்கல் மக்களைப் போலவே முழு தெற்காசிய வலய மக்களும் எதிர்நோக்கியிருக்கும் இந்த அபாயகரமான சூழல் சிகரெட், மதுபானங்களைப் போலவே கோழிப் பண்ணைகளிலிருந்து அந்தந்த நாட்டு அரசாங்கங்களுக்குக் கிடைத்துவருகின்ற அதிகரித்த வரி வருமானங்களைக் கருத்திற்கொண்டு திட்டமிட்டு மறைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.









No comments: