Thursday, 22 September 2016

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற கரையோர சுத்தம் பேணும் சர்வதேச தின நிகழ்வு


கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத் திணைக்களம் மற்றும் கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவற்றின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வருடத்தின் கரையோர சுத்தம் பேணும் சர்வதேச தின நிகழ்வு உதவிப் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் இன்று (22) காலை இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கரையோரப் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எஸ்.பாபுஜியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ்வைபவம் அக்கரைப்பற்று - 9 கிராம சேவகர் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் தாம்போதியிலிருந்து காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகி, அக்கரைப்பற்று இந்து மயானத்துக்கு அருகிலுள்ள ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம் வரையிலான சுமார் 2½ கிலோமீட்டர்கள் நீளமான கடற்கரைப் பிரதேசத்தைச் சுத்தப்படுத்தும் நிகழ்வாக காலை 11.00 மணிவரை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா உள்ளிட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர் திருமதி. என்.டி.எஸ்.எல்.செனேவிரத்ன, ஆலையடிவேம்பு பிரதேச மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.மகேஸ்வரன், மேஜர் ஜயசேன, மேஜர் அபயசேகர மற்றும் கேணல் தினேஷ் நாணயக்கார உள்ளிட்ட அக்கரைப்பற்று இராணுவ முகாமைச் சேர்ந்த சுமார் 60 இராணுவ வீரர்களும், ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக உறுப்பினர்கள் 20 பேரும், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் சுமார் 20 பொலிஸ் உத்தியோகத்தர்களும், ஆசிரியர் ரி.சுதாகரன் தலைமையில் கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய மாணவ, மாணவிகள் 40 பேரும், சின்னமுகத்துவாரம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களும், கழிவுகளை இடம்மாற்றும் உழவு இயந்திரங்களுடன் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளர் திருமதி. விஜயராணி கமலநாதன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் சுமார் 10 பேரும் பங்குபற்றியிருந்தனர்.

ஆலையடிவேம்பு உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் மற்றும் அக்கரைப்பற்று இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் ஜயசேன ஆகியோரின் இன்றைய கரையோர சுத்தம் பேணும் சர்வதேச தின நிகழ்வு தொடர்பான உரைகளைத் தொடர்ந்து அவர்களால் பாதுகாப்புக் கையுறைகளும், கழிவு சேகரிக்கும் பைகளும் பங்குபற்றுனர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. தகிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது இடம்பெற்ற குறிப்பிட்ட கடற்கரைப் பிரதேசத்தைச் சுத்தமாக்கும் பணிகளுக்கான தாகசாந்தி மற்றும் காலையுணவு வசதிகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வின் இறுதியில் தமது அழைப்பை ஏற்று குறித்த பணிகளில் இணைந்துகொண்ட அனைத்து பொதுத்துறை உத்தியோகத்தர்கள், படையினர், இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் ஆலையடிவேம்பு உதவிப் பிரதேச செயலாளர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.















No comments: