மனிதனின்
மரணத்தின் பின் அவனது உடலத்துக்குச் செய்யப்படும் ஈமக்கிரியைகள் தொடர்பாக இந்துமத
சித்தாந்தங்கள் கூறும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின் தொகுப்பாக அமைந்த ‘அபரக்
கிரியைகளும், ஆன்ம ஈடேற்ற மோட்ச மாலையும்’ நூலின் வெளியீட்டு வைபவம்
அக்கரைப்பற்று, மருதடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் நேற்று (04) மாலை
இடம்பெற்றது.
அக்கரைப்பற்று,
விவேகானந்தா வித்தியாலய அதிபர் ரி.தவராஜா தலைமையில் மருதடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
ஆலய பரிபாலன சபையினரின் அனுசரணையோடு இடம்பெற்ற இவ்வைபவத்தில் கிழக்கிலங்கையில் சமயப்
பணியாற்றிவரும் சிவதொண்டர் அமைப்பின் ஸ்தாபகரும் சமாதான நீதவானுமான எஸ்.திருஞானமூர்த்தியினால்
தொகுக்கப்பட்ட குறித்த நூலின் உத்தியோகபூர்வ வெளியீட்டு வைபவத்திற்கு அதிதிகளாக தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன்
கோடீஸ்வரன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் ஆகியோர் கலந்துசிறப்பித்திருந்ததுடன்,
ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றப் பிரதிநிதிகளும் சைவப் பெருமக்களும் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
மருதடி
ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ க.மு.தேவமனோகரக் குருக்களின்
ஆசியுரையோடு ஆரம்பமான நூல் வெளியீட்டு வைபவத்தில் இடம்பெற்ற தலைமையுரை மற்றும்
நூல் அறிமுக உரையைத் தொடர்ந்து முதற்பிரதியை நூலாசிரியரோடு பாராளுமன்ற உறுப்பினரும்
பிரதேச செயலாளரும் இணைந்து தம்பிலுவிலைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியையும் ஆன்மீக
செயற்பாட்டாளருமாகிய திருமதி. கணேஸ்வரி வன்னியசிங்கத்துக்கு வழங்கிவைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சபையோருக்கும் கலந்துகொண்ட சைவப் பெருமக்களுக்கும் நூலின்
பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இவ்வைபவத்தின்போது
இடம்பெற்ற ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இந்துமதம் தழைத்தோங்க அயராது உழைத்துவரும் மேன்மக்களைக்
கெளரவிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்,
நூலாசிரியர் உட்பட பலரும் அங்கு பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டிருந்தனர்.
No comments:
Post a Comment