Monday, 17 July 2017

இரு மாணவர் குழுக்களிடையே மோதல்

அம்பாறை, ஹாடி உயர்க் கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணை செய்வதற்கு, அந்நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவினர், இன்று (17) நிறுவனத்துக்கு விஜயம் செய்து, விசாரணைகளை முன்னெடுத்ததாக, அதிபர் ஏ.வாறூன் தெரிவித்தார்.



விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர் குழுக்களுக்கும் மற்றுமொரு மாணவர் குழுவுக்குமிடையே, கடந்த 11ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை இடம்பெற்று வந்த மோதலையடுத்து, உயர்க்கல்வித் தொழில்நுட்ப நிறுவனம், மறு அறிவித்தல் வரை கடந்த வியாழக்கிழமை (13) முதல் மூடப்பட்டது.

மாணவர்களின் இந்த மோதல் சம்பவத்தில், விடுதியில் தங்கிருந்த 9 மாணவர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் எனவும் மோதலுடன் தொடர்புடைய 10 மாணவர்கள், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர் எனவும், நிறுவனத்தின் அதிபர் தெரிவித்தார்.

இச்சம்பவங்களை விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட குழுவினர், நிறுவனத்தின் விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விசாரணையின் அறிக்கை, இலங்கை உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்படுமெனவும் இதன் பின்னரே, தொழில்நுட்ப நிறுவனத்தை மீளத் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
haran

No comments: