‘’அரங்கம்’’ நிறுவனத்தால் ‘’முத்தமிழ் வித்தகர் விபுலாநந்தர்'' என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம், மட்டக்களப்பு நல்லையா உடையார் குடும்பத்தினரின் ஏழாவது திருவிழாவின் போது மாமாங்கம் ஆலயத்தில் மாலையில் வெளியிடப்படவுள்ளது.
தமிழ் இசை ஆய்வில் ஈடுபட்டவர்களின் மிகவும் மகத்தானவராக போற்றப்படும் விபுலாநந்த அடிகளாரின் ஆய்வு நூலான ‘’யாழ் நூல்’’ தமிழ் அன்னைக்கு அழகு சேர்த்த ஒரு பெரும் அணி. தமிழரின் பாரம்பரிய வாத்திய கருவியான யாழை மீளுருவாக்கம் செய்யும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார். இது தவிர இயல், இசை, நாடகம் குறித்து பல ஆய்வுகளை அவர் மேற்கொண்டிருக்கிறார்.
தமிழகத்தின் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தமிழ்த் துறைகளின் முதலாவது தலைவராகச் செயற்பட்ட விபுலாநந்தர், இலங்கையில் பல இடங்களிலும் இராமகிருஷ்ண மிஷனின் உதவியுடன் பள்ளிக்கூடங்களை அமைத்து அங்கு தமிழ், முஸ்லிம் மக்களின் கல்விக்கு வழி காட்டியவராகவும் திகழ்ந்துள்ளார்.
பன்மொழி, பல துறைப் புலமை கொண்டவரான அவரை, விஞ்ஞான ரீதியில் தமிழை ஆய்வு செய்தவர்களின் முதன்மையானவராக தமிழறிஞர்கள் போற்றுகின்றார்கள்.
இலங்கை மற்றும் இந்தியாவில் தமிழ் மற்றும் சமூகப் பணி ஆற்றிய அவரது வாழ்க்கை பற்றி இந்த ஆவணப்படம் விபரிக்கிறது. தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் எமது அடுத்த தலைமுறை ஆகியோரை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தை கனடாவைச் சேர்ந்த பாபு வசந்தகுமார் தயாரிக்க, ரகுலன் சீவகன் இயக்கியிருக்கிறார்.
அனைவரையும் இந்த வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
No comments:
Post a Comment