ஈழத்துச் சித்தர்கள் வரிசையில் ஸ்ரீ நவநாத சித்தர் மற்றும் ஸ்ரீ பெரியானைக்குட்டி சித்தர்களோடு இணைந்து முப்பெரும்
சித்தர்களில் ஒருவராகக் கொள்ளப்படுபவரும், பாரத தேசத்தின் தென்னிந்தியாவிலுள்ள
இராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி இராச்சியத்தின் சிற்றரசரின் மகனாக கோவிந்தசாமி
எனும் இயற்பெயருடன் அவதரித்து ஈழத் திருநாட்டின் கிழக்கே அப்போது மட்டக்களப்பு
மாவட்டத்தின் இந்துக் கலாசாரம் கோலோச்சியிருந்த முல்லை, மருதம், நெய்தல்
நிலங்களால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் காரைதீவு கிராமத்தில் தமிழ் வளர்த்த
சைவப் புலவர் விபுலானந்த அடிகளார் வாழ்ந்த காலத்தில் அவரது ஆத்மீக நண்பராக
இருந்தவரும், பதினெண் சித்தர்களில் ஒருவரான ஸ்ரீ போகர் சித்தரின் அவதாரமாக
வந்துதித்து காரைதீவில் குடிகொண்டு சித்துக்களாலும் அற்புத லீலைகளாலும் சைவம்
வளர்த்த ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகள் ஜீவ சமாதியடைந்த 66 ஆவது ஆண்டு நிறைவையும்
குரு பூசையையும் முன்னிட்டு காரைதீவிலுள்ள சுவாமிகளது ஜீவ சமாதி ஆலயத்திலிருந்து
கிழக்கிலங்கையின் சைவப் பெருமக்கள் செறிந்து வாழும் அட்டப்பள்ளம், திராய்க்கேணி,
ஆலையடிவேம்பு, கோளாவில், பனங்காடு, கண்ணகிகிராமம் பிரதேசங்களினூடாக இன்று (11) நடைபெற்றுக்கொண்டிருக்கும்
ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் மாபெரும் சித்தர் ரத பவனியை ஆலையடிவேம்பு
பிரதேசத்துக்கு வரவேற்கும் சிறப்பு நிகழ்வு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையில்
இடம்பெற்றது.
தமிழ் தேசிய
கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் பிரதம
அதிதியாகக் கலந்து சிறப்பித்த குறித்த வரவேற்பு நிகழ்வானது சாகாம வீதியின் ஈழச்
சந்தைக்கு அருகில் இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது ஸ்ரீ
சித்தானைக்குட்டி சித்தரின் திருவுருவப் படங்களால் அழகுற அலங்கரிக்கப்பட்ட இழுவைப்
பெட்டிகளுடன் கூடிய உழவு இயந்திரங்களில் சுவாமிகளின் அடியவர்கள் அவரது
அற்புதங்களைச் சொல்லும் அருட் பாமாலைகளைப் பாடியவாறு தமிழ் கலாசார ஆடை
அணிகலன்களோடு பவனியாக வந்த காட்சி மிகுந்த பக்தி மயமாகக் காட்சியளித்திருந்தது.
குறித்த ரத பவனியின்
ஆலையடிவேம்பு பிரதேச நிகழ்வுகளுக்கான ஒழுங்கமைப்பையும் ஏற்பாடுகளையும்
ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்னெடுத்திருந்ததுடன், ரத பவனியை வரவேற்கும் அந்த
உணர்வுபூர்வமான நிகழ்வையும் அடியவர்களையும் வரவேற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்
அங்கு உரையாற்றியிருந்ததுடன், ஸ்ரீ சித்தானைக்குட்டி சித்தரின் திருவுருவப் படத்துக்குத்
கற்பூர தீபாராதனை செய்யும் பாக்கியத்தையும் பெற்றிருந்தார். ஆசியுரையை நாடாளுமன்ற
உறுப்பினர் வழங்கியிருந்தார். இவ்வரவேற்பு நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக
உத்தியோகத்தர்களுடன், ஆலையடிவேம்பு இந்து மாமன்ற உறுப்பினர்களும், இந்து
ஆலயங்களின் பிரதிநிதிகளும் கலாசார உடைகளுடன் கலந்து சிறப்பித்தமை கண்கொள்ளாக்
காட்சியாக விளங்கியது.
தொடர்ந்து குறித்த ரத
பவனியானது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் சைவப் பெருமக்களின் தரிசனத்தின்
பொருட்டு இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலயம், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம்,
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லம், திருவள்ளுவர்
வித்தியாலயம், ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம், ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம்,
திருநாவுக்கரசு வித்தியாலயம், ஸ்ரீ முருகன் ஆலயம், ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார்
ஆலயம், ஸ்ரீ வம்மியடிப் பிள்ளையார் ஆலயம், ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரி, ஸ்ரீ
மஹா கணபதி ஆலயம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஆகியவற்றினைக் கடந்து சாகாம
வீதியூடாக மகாசக்தி அமைப்பின் தலைமையகம், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், பெருநாவலர்
வித்தியாலயம், ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயம், விநாயகர் மகா வித்தியாலயம், பாசுபதேசுபரர்
வித்தியாலயம், ஸ்ரீ பாசுபதேசுபரர் ஆலயம், ஸ்ரீ நாக காளியம்மன் ஆலயம் என்பவற்றுக்குச்
சென்று பின் கண்ணகிகிராமத்தை அடைந்து அங்கு ஸ்ரீ விநாயகர் ஆலயம் மற்றும் கண்ணகி
வித்தியாலயம் ஆகிய இடங்களுக்குச் சென்று மீண்டும் திரும்பி சாகாம வீதியூடாக கல்முனை
வீதிக்குச் சென்று அதனூடாக மீண்டும் காரைதீவு கிராமத்திலுள்ள ஸ்ரீ
சித்தானைக்குட்டி சுவாமிகளின் ஜீவ சமாதி ஆலயத்தைச் சென்றடைந்ததும் இனிதே நிறைவடையவுள்ளது.
இதேவேளை குறித்த ரத
பவனியானது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தைச் சென்றடைந்ததும் அதில் கலந்துகொண்ட ஸ்ரீ
சித்தானைக்குட்டி சித்தர் சுவாமி அடியவர்களின் தாகங்களைத் தீர்க்கும் தாக சாந்தி
வைபவம் இடம்பெற்றது. இவ்வைபவத்தையும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் முன்னின்று பகிர்ந்து
ஆரம்பித்து வைத்திருந்தார். தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவராக
சித்தரின் உருவப் படத்துக்கு மலர் தூவி ஆசி பெற்றதுடன், தீபாராதனையும் ஆலய சமுகத்தினரால்
குரு பூசையையொட்டி வெளியிடப்பட்ட ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் வரலாற்று
நூலும் அவரது திருவுருவப் படங்களும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரிடம்
கையளிக்கப்பட்டன.
கடந்த 1951 ஆம் வருடம் தமிழுக்கு
ஆடித் திங்கள் 21 ஆம் நாளான ஒரு சுவாதி நட்சத்திர தினத்தில் ஜீவ சமாதியடைந்த ஸ்ரீ
சித்தானைக்குட்டி சுவாமிகளின் 66 ஆவது குரு பூசையும் மாபெரும் அன்னதான வைபவமும்
எதிர்வரும் 30-07-2017 ஞாயிறன்று அவர் சமாதியடைந்த ஸ்ரீ சித்தானைக்குட்டி ஜீவ சமாதி
ஆலயத்தில் இடம்பெறவுள்ளமை குறித்துக் கருத்துத் தெரிவித்த ஆலய சமுகத்தினர், ஈழமெங்கும்
பரந்து வாழும் சித்தானைக்குட்டி சித்தரின் அடியவர்கள் அனைவரையும் அந்நிகழ்வுகளில்
கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment