Wednesday, 19 July 2017

விதை நெல் அறுவடை விழா

haran
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் விதை நெல் அறுவடை விழா கரவெட்டி முள்ளாமுனை கண்டத்தில் செவ்வாய்கிழமை (18ஆம் திகதி) நடைபெற்றது.


விவசாயப் போதனாசிரியர் கே.லிங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா அதிதியாக கலந்துகொண்டு சுபநேரம் நண்பகல் 12.00 மணிக்கு நெல் அறுவடையினை ஆரம்பித்து வைத்தார்.





இதன்போது மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா விவசாயிகள் மத்தியில் உரையாற்றுகையில், இப் பிரதேச விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விதை நெல் சுத்திகரிப்பு இயந்திரத்தை பயன்படுத்தி விவசாயிகள் உச்சப் பயனைப் பெறுவதுடன் தரமான விதை நெற்களையும் உற்பத்தி செய்ய வேண்டும்.

எமது பிரதேச விவசாயிகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும், இங்கு உற்பத்தியாகும் நெல்லினை குறைந்த விலைக்கு இடைத் தரகர்களின் ஊடாக விற்பனை செய்யாமல் அதனை சரியான முறையில் பதப்படுத்தி விதை நெல்லுக்காக விற்பனை செய்யும்போது கூடிய இலாபத்தினை அடையமுடியும்.

இப் பிரதேசத்தில் தரமான விதை நெற்களை உற்பத்தி செய்யும் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்தவுடன் அதனை குறைந்த விலைக்கு விற்றுவிடுகின்றனர். பின்னர் அடுத்த போகம் நெற்செய்கைக்கு மிகக் கூடிய விலை கொடுத்து தரமற்ற நெல்லினங்களை கொள்வனவு செய்யும் நிலை வேதனைக்குரியது. இந்த விடயத்தைப் பற்றி நாம் அனைவரும் சற்று சிந்திக்க வேண்டும் எதிர் காலத்தில் விவசாயிகளிடத்தில் இவ்வாறான நிலை இருக்கக் கூடாது.

ஏனைய தொழில் துறையில் திட்டமிட்டு அவர்கள் செயற்படுவதுபோல் நமது விவசாயத் தொழிலிலும் நாம் திட்டமிட்டு செயற்பட வேண்டியது அவசியம். எனத் தெரிவித்தார்.

சிறுபோக நெற் செய்கையின் நெல் அறுவடை இப் பிரதேசத்தில் தற்போது ஆரம்பித்துள்ளது.
இந் நிகழ்வில் விவசாயப் போதனாசிரியர் ஏ.டபிளுயூ. எம். சிபான், கரடியனாறு விவசாய விதை அத்தாட்சி பிரிவு உத்தியோகத்தர், விவசாய அமைப்புக்கள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.













வவுணதீவில் விதை நெல் அறுவடை விழா Rating: 4.5 Diposkan Oleh: Satheesh வர்ணன்

No comments: