Thursday, 13 July 2017

போதைப்பொருளற்ற ஆன்மீக அபிவிருத்தியினூடாக மகிழ்ச்சியான குடும்பங்களை உருவாக்குவது தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு



சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் தொழிற்படும் சமுக அபிவிருத்திப் பிரிவின் விழிப்புணர்வூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைத்தல், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஆன்மீக அபிவிருத்தியூடாக மகிழ்ச்சிகரமான குடும்பங்களை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளிலமைந்த விழிப்பூட்டல் செயலமர்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் முழுநாள் பயிற்சியாக இன்று (13) இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி சமுக அபிவிருத்திப் பிரிவினால் தலைமைப்பீட முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சமுர்த்திச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், வளவாளர்களாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் எம்.எம்.ரெமென்ஸ் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டுத் தேசிய சபையின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.காலித் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மூன்று அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டு நடாத்தப்பட்ட குறித்த விழிப்பூட்டல் செயலமர்வின் முதலாவது பகுதியை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் முன்னெடுத்திருந்தார். ஆன்மீக அபிவிருத்தியூடாக மகிழ்ச்சிகரமான குடும்பங்களை உருவாக்குதல் எனும் தலைப்பில் அவர் நடாத்தியிருந்த அமர்வில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தக்கூடிய மனோபாவத்தை ஆன்மீக ஈடுபாட்டை ஆதிகரிப்பதன் மூலம் எவ்வாறு பழக்கப்படுத்திக்கொள்ளலாம் என்பதை சைவ சமய ஆன்மீக ஞானிகளின் வாழக்கை வரலாறுகள், அவர்களது சொற்பொழிவுகள் என்பனவற்றினூடாகத் தெளிவுபடுத்தியிருந்தார்.

இரண்டாவது பகுதியை நடாத்திய வைத்திய நிபுணர் எம்.எம்.ரெமென்ஸ் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து முதலில் தெளிவுபடுத்தியிருந்ததுடன், விளக்கக் காணொளிகளூடாக தொடர்ச்சியான புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டால் உடற்கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள், மனித உடலில் அவை செயற்படும் விதம், உடல் உறுப்புக்களில் நோய்த் தாக்கங்கள் பரவும் விதம், அதன் பின்னரான எதிர்மறையான விளைவுகளால் மனிதனின் புறச் செயற்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக மனிதன் எதிர்கொள்ளும் அபாயங்கள் என்பன தொடர்பாகத் தெளிவான விளக்கங்களை வழங்கியிருந்தார். இதன்போது அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலய சுகாதாரப் பிரிவு மாணவர்களால் அங்கிருந்த பங்குபற்றுனர்களுக்கு புகைத்தலால் மனிதனின் நுரையூரலில் ஏற்படும் மாற்றம் தொடர்பான செயல் விளக்கமொன்றும் செய்துகாட்டப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மூன்றாவது பகுதியில் போதைப்பொருட்களின் பாவனை தொடர்பில் நமது சமூகங்களில் காணப்படும் மூடநம்பிக்கைகள் மற்றும் மறைமுகமான அங்கீகாரம் என்பன தொடர்பில் அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டுத் தேசிய சபையின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.காலித் விளக்கமளித்ததுடன், இன்றைய இளையோர் சமுதாயம் அதனால் எவ்வாறான அபாயங்களை எதிர்கொண்டுள்ளது என்பது தொடர்பிலும் அங்கு எடுத்துரைத்திருந்தார்.

















No comments: