கிழக்கிலங்கையில்
வரலாற்றுப் பிரசித்திபெற்ற உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் ஆலயத்தின் வருடாந்த திருவிழாக்காலத்திற்கு
முன்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளப்பட்டுவரும்
சிரமதான வேலைத்திட்டமும் விசேட பூஜை வழிபாடுகளும் இம்முறை கடந்த (ஜூன்) 17 மற்றும்
18 ஆம் திகதிகளில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றன.
இதன்போது
உதவிப் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் உட்பட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின்
அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த சுமார் நூறு உத்தியோகத்தர்கள் இணைந்து இச்சிரமதானப்
பணிகளை முன்னெடுத்ததுடன், இரு தினங்களிலும் உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் தொடர்ச்சியான
சிரமதான வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக முதல்நாள்
சிரமதான வேலைகளில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர் கெளரவ கவிந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் பிரதேச செயலக
உத்தியோகத்தர்களோடு இணைந்து பங்கெடுத்திருந்தார். ஆலயப் பிரதம குருக்களால் 17ஆந் திகதி
வெள்ளிக்கிழமை இரவு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் விசேட பூஜை வழிபாடுகள் பிரதேச
செயலாளரின் தலைமையில் நிறைவேற்றப்பட்டதுடன், அன்றைய தினம் பிரதேச செயலக
உத்தியோகத்தர்களின் பொங்கல் வைபவமும், நிருவாக உத்தியோகத்தர் ஆறுமுகம் சசீந்திரன்
தலைமையில் விசேட பஜனை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
குறிப்பிட்ட
பூஜை நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆலயத்திற்கு வருகைதந்திருந்த
தமிழ், சிங்கள முருகன் அடியவர்கள் பெருமளவில் பங்கெடுத்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment