Tuesday, 14 June 2016

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்


சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்தகால யுத்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் 65,000 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள பொதுமக்களுக்கான வீடுகளை நிர்மாணித்து வழங்கும் வேலைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனால் ஆரம்பித்துவைக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டத்தில் முதற்கட்டமாக 8 வீடுகளை அமைப்பதற்கான முதலாவது அடிக்கல் நடும் வைபவம் அக்கரைப்பற்று - 8 கிராமசேவகர் பிரிவில் நேற்று (13) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளருடன் உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ரஞ்சன், பிரதேச செயலாளரின் வெகுஜனத் தொடர்புகள் உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.உமாதட்சன்யா ஆகியோர் கலந்துகொண்டு சுபநேரமொன்றில் அடிக்கற்களை நட்டுவைத்து குறித்த வீட்டுத்திட்டத்துக்கான வேலைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தனர்.

அதனைத்தொடர்ந்து இன்று (14) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் மற்றும் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ரஞ்சன் ஆகியோர் ஆலையடிவேம்பு பிரதேசத்தின் ஏனைய கிராமசேவகர் பிரிவுகளுக்கும் நேரடியாக விஜயம் செய்து மேற்படி வீடுகள் அமைக்கப்பட்டுவரும் வேலைகளைப் பார்வையிட்டனர்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக மேற்படி வீடுகள் அக்கரைப்பற்று - 8, வாச்சிக்குடா, கோளாவில் - 1, சின்னப்பனங்காடு, கண்ணகிகிராமம் - 2 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.











No comments: