Wednesday, 15 June 2016

ஆலையடிவேம்பில் புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு


அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்பின் (SWOAD) அனுசரணையோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்புரி வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்களது கல்வி கற்கும் பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (15) காலை இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு தெரிவுசெய்யப்பட்ட மூன்று குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பொதிகளை வழங்கிவைத்தனர்.

இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஜி.தயாபரன், கே.செல்வானந்தம், அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்பின் திட்ட உத்தியோகத்தர் எஸ்.கங்கேஸ்வரி ஆகியோருடன் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்களும் குறித்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப அங்கத்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைத் தொழிலாளர்கள் தாம் பணியாற்றும் இடங்களில் எதிர்பாராத பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கும் சூழ்நிலைகள் ஏற்படும்போது அவர்களின் குடும்பங்களுக்கான அத்தியாவசிய உதவிகளை வழங்கும் நலனோம்பல் வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே குறித்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.






No comments: