Saturday, 25 June 2016

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் நடமாடும் சேவை


அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜமீல் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்களுக்காக நடாத்தப்பட்ட மாபெரும் நடமாடும் சேவை நிலையமொன்று இன்று (25) காலை 9.30 மணி முதல் அக்கரைப்பற்று, கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த உத்தியோகத்தர்களும், அக்கரைப்பற்று கால்நடை வைத்தியசாலை, மாவட்ட வைத்தியசாலை, ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியின் பணிமனை, ஆலையடிவேம்பு பிரதேச சபை, ஆயுர்வேத மத்திய மருந்தகம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் நடமாடும் பற்சிகிச்சைப் பிரிவு அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்ட இந்நடமாடும் சேவை நிலையத்தின் பணிகள் யாவும் தேசியக்கொடியேற்றலோடு ஆரம்பமாகின.

இதன்போது இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் தேசியக்கொடியை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும், பொலிஸ் திணைக்களத்தின் கொடியை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலும் அதிதிகள் உரையும் இடம்பெற்றன. இதன்போது பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவமொன்றும் அங்கு இடம்பெற்றிருந்தது.

அங்கு தலைமையுரையாற்றிய அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தான் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாகக் கடமையேற்றதன் பிற்பாடு ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களுக்காக நடாத்தும் இரண்டாவது நடமாடும் சேவை நிலையம் இதுவெனக் குறிப்பிட்டதோடு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவ்வாறானதொரு நடமாடும் சேவையை தூரப் பிரதேசமான கண்ணகிகிராமத்தில் மிகவும் வெற்றிகரமாக நடாத்திமுடித்ததாகவும் குறிப்பிட்டார்.

அடுத்து உரையாற்றிய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், இந்த நாட்டில் சட்டமும், நீதியும் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் மாபெரும் பொறுப்பு பொலிஸ் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் தமது சுய விருப்பு, வெறுப்புக்களைப் புறந்தள்ளிவிட்டு 24 மணிநேரமும் பொதுமக்களின் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்துச் சேவையாற்றிவருவதோடு, தங்களைப் போலவே பொதுமக்களின் சேவையில் ஈடுபட்டுவரும் எம்மைப்போன்ற அரச உத்தியோகத்தர்களை ஒன்றிணைத்து அவர்களது சேவைகள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் பொதுமக்களுக்குக் கிடைக்கும்வகையில் இதுபோன்ற நடமாடும் சேவைகளை ஒழுங்குசெய்து தங்களது கடமைகளுக்கு மேலதிகமாக இன்னும் சிறப்பாகச் செயற்பட்டுவருகின்றனர். அதிலும் குறிப்பாகப் பூரணமாகத் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் எமது  ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களுக்குப் பொறுப்பாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜமீல் நியமிக்கப்பட்டிருப்பதும், அவர் மேற்கொண்டுவரும் அளப்பரிய சேவைகளும் இதுபோன்ற நடமாடும் சேவை நிலையங்களினூடாக மேலும் சிறப்பான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகவும் அங்கு குறிப்பிட்டார்.

தொடர்ந்து குறித்த நடமாடும் சேவை மையத்தின் பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பமாகி இடம்பெற்றன. இதில் ஆலையடிவேம்பு பிரதேசத்தின் அளிக்கம்பை, கண்ணகிகிராமம் போன்ற தூரப் பிரதேசங்கள் உள்ளடங்கலாக பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் வருகைதந்து தமக்கான சேவைகளை அங்கு பெற்றுக்கொண்டனர்.




















No comments: