Thursday, 24 March 2016

ஆலையடிவேம்பில் மேற்கொள்ளப்படவுள்ள மந்த போஷாக்குடைய நபர்களின் கணக்கெடுப்பு தொடர்பான கலந்துரையாடல்


சிறுவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர், யுவதிகளின் போஷாக்குமிக்க வாழ்க்கைமுறையை முன்னேற்றமடையச் செய்தல் தொடர்பான சுதேச மருத்துவ அமைச்சின் கருத்திட்ட விதந்துரைப்புகளுக்கமைய
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள போஷாக்கு மேம்பாட்டுக்கான செயற்பாட்டுக் குழுவினரால் மேற்கொள்ளப்படவுள்ள மந்த போஷாக்குடைய நபர்களின் கணக்கெடுப்பு சம்மந்தமாக அங்கத்தவர்களைத் தெளிவூட்டும் கலந்துரையாடலொன்று பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இன்று (24) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத் திட்டமிடல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கலந்துரையாடலுக்கான ஒழுங்குகளை முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சுகந்தினி தனராஜன் ஆகியோர் மேற்கொண்டிருந்ததோடு, கணக்கெடுப்பு குறித்த தெளிவுபடுத்துனராக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜாவும், திவிநெகும தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ ஆகியோர் பதவிநிலை உத்தியோகத்தர்களாகவும் கலந்துகொண்டார்கள்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தின் கிராமமட்ட போஷாக்கு மேம்பாட்டுக்கான செயற்பாட்டுக் குழுக்களின் அங்கத்தவர்களான பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், கிராம உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளரின் அறிமுக உரையும், பிரதித் திட்டமிடல் பணிப்பாளரின் தெளிவுபடுத்தல்களும் இடம்பெற்றிருந்தன.









No comments: