Saturday, 26 March 2016

ஆலையடிவேம்பில் கல்வி கலாசார அபிவிருத்தி நிலையம் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பம்; அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சுவாமிநாதன்!


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கவிந்திரன் கோடீஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 1.5 மில்லியன் ரூபாய் முதற்கட்ட ஒதுக்கீட்டின்கீழ்
ஆரம்பிக்கப்பட்டுள்ள மூன்று மாடிக் கட்டடமாக அமையவுள்ள கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி மையத்தின் ஆரம்பக் கட்டுமான வேலைகளுக்கான அடிக்கல் நடும் வைபவம் இன்று (26) பிற்பகல் 3.00 மணிக்கு ஆலையடிவேம்பு பிரதேசத்தின் அக்கரைப்பற்று – 7/2 கிராம சேவகர் பிரிவிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரனின் அழைப்பின் பேரில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன், அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசனும் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வின் சமயச் சடங்குகளை அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயப் பிரதம குரு விஸ்வப் பிரம்மஸ்ரீ தங்கவேல் சிவாச்சாரியார் நடாத்திவைத்தார்.

மங்கல விளக்கேற்றலோடு ஆரம்பமான நிகழ்வுகளில் வரவேற்புரையை ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளருமான எம்.காளிதாசன் நிகழ்த்தினார். அடுத்து அங்கு தலைமையுரையாற்றிய பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் எமது மக்களின் கல்வி, கலை, கலாசார விழுமியங்களைப் பேணிப் பாதுகாக்கத் தேவையாகவிருந்த  இவ்வாறானதொரு அபிவிருத்தி நிலையம் குறித்து தானும் இந்து மாமன்ற உறுப்பினர்களும், இப்பிரதேசச் சைவப் பெருமக்களும் விடுத்த கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, உடனடியாக அந்நிலையத்தை இங்கே அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்த பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனுக்கு நன்றி தெரிவித்தார்.

அடுத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரும் அரசியல்வாதிகள் பலர் நம்மிடையே இருக்கின்றனர். அதுபோல் அரசியலுக்கு வந்து தனது பணத்தை இழந்தவர்களும் இருக்கின்றார்கள். இதில் அமைச்சர் சுவாமிநாதன் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டதோடு, பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனோடு அவர் கொண்டுள்ள ஆழமான நட்பினாலேயே இன்று இந்த நிகழ்வில் அவரது பிரசன்னம் சாத்தியமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், இந்த நாட்டில் எமது தமிழ் மக்கள் கடந்தகால உள்நாட்டுக் கலவரத்தினால் வீடு வாசல்களையோ, உயிர் உடமைகளையோ அல்லது அத்துமீறிய குடியேற்றங்களால் காணி பூமிகளையோ மட்டும் இழக்கவில்லை. அவர்கள் தமிழர் என்ற தமது அடையாளத்தையும், அதுபோல நம் முன்னோர்கள் தமது உயிருக்கு நிகராகப் பேணிப் பாதுகாத்து வந்த கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் இழந்து நிற்கின்றனர். தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் அழிந்துவரும் சமுகப் பண்பாடுகளை தமிழர்களின் பிரதிநிதி என்ற பொறுப்போடு பாதுகாத்து நிலைநிறுத்தும் எனது கடமையின் ஒரு அங்கமாகவே எனக்கு ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நான் பிறந்த இந்த ஆலையடிவேம்பு மண்ணில் இக்கட்டடத்தை அமைக்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். இதற்கு என்னை நேசிக்கும் நீங்கள் அனைவரும் ஆதரவு வழங்கி உதவவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அடுத்து அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் சார்பில் அதன் செயலாளர் கே.செல்வானந்தம், ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் சார்பில் அதன் தலைவர் எஸ்.சந்திரசேகரம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்களின் சார்பில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளருமான எம்.காளிதாசன் ஆகியோர் அமைச்சர் சுவாமிநாதனைப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.

அதனைத் தொடர்ந்து சமய ஆராதனையோடு இடம்பெற்ற அடிக்கல் நடும் நிகழ்வில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான கவிந்திரன் கோடீஸ்வரன் மற்றும் ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரது சார்பில் அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயப் பிரதம குரு விஸ்வப் பிரம்மஸ்ரீ தங்கவேல் சிவாச்சாரியார் அடிக்கற்களை நட்டுவைத்தார். அவரைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா ஆகியோருடன் கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகளும் அங்கு அடிக்கற்களை நட்டுவைத்தார்கள்.

இறுதியாகப் பேசிய அமைச்சர் சுவாமிநாதன், கடந்தகால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குஉ றைவிட நிவாரணமாகத் தனது அமைச்சினால் வடக்கு கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 65,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தைக் குழப்பும் வகையில் சிலர் தீவிரமாகச் செயற்பட்டுவருவதாகக் குறிப்பிட்டதுடன், மனித வாழ்க்கைக்கு உதவாத உஷ்ணம் கூடிய வீடுகளாக அவை அமைந்துள்ளதாகவும், சுவாத்தியமற்ற வகையில் மக்களுக்கு வியாதிகளை உண்டாக்கக்கூடிய பொறிமுறைகள் குறித்த வீடுகளின் கட்டுமானப் பணிகளில் பின்பற்றப்படுவதாகவும் விஷமப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். அவ்வீடுகளின் தரத்தை பரிசோதிக்க விரும்பும் எவரும் யாழ்ப்பாணம் கோப்பாயில் அமைக்கப்படுள்ள மாதிரி வீடுகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டு உண்மையை அறிந்துகொள்ளமுடியும் எனவும் அங்கு குறிப்பிட்டார்.















No comments: