Wednesday, 2 March 2016

ஆலையடிவேம்பில் இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்துக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பு


ஆலையடிவேம்பு பிரதேசத்தின் இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்துக்குப் புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான புனரமைப்புக் கூட்டம் கடந்த ஞாயிறு (28/02) இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், விசேட அதிதியாக மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் யூ.எல்.ஏ.மஜீத் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாகப் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், கிராம அலுவலர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ மற்றும் பிரதேச செயலாளரது வெகுஜனத் தொடர்புகள் உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த்
ஆகியோர் கலந்து சிறப்பித்த இக்கூட்டத்திற்குக் கிராம உத்தியோகத்தர்களுடன் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட 22 இளைஞர் கழகங்களின் உறுப்பினர்களும் சமுகமளித்திருந்தனர்.

இக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக இளைஞர் கழக உறுப்பினர்கள் சம்மேளனத்தின் உறுதிமொழியை எடுத்துக்கொண்டதுடன், தலைமையுரையாற்றிய இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட், கடந்த வருடங்களில் பிரதேச சம்மேளனத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தலைமைத்துவப் பயிற்சி வேலைத்திட்டங்கள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் பிரதேச சம்மேளன உறுப்பினர்களின் பங்களிப்புக்கள் தொடர்பாகப் பேசியதுடன், இவ்வருடத்தில் தாம் அடைந்துகொள்ள எதிர்பார்த்துள்ள இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

அடுத்து உரையாற்றிய நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், கடந்த சுதந்திர தினமன்று பிரதேச செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட சிரமதான வைபவத்தில் தமது அழைப்பையேற்று வருகைதந்து அச்சிரமதானத்தை சிறப்பாகச் செய்துமுடித்த கோளாவில் - 3, அண்ணா இளைஞர் கழக உறுப்பினர்களுக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து அங்கு விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் யூ.எல்.ஏ.மஜீத், கடந்த வருடம் இடம்பெற்ற மாவட்டமட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைக் குவித்த ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக வீரர்களுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இவ்வருடம் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள இளைஞர்களின் உளவள, தலைமைத்துவ, கலாசார மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பயிற்சித் திட்டங்கள் தொடர்பாகப் பேசியதோடு, அப்பயிற்சிகளுக்குக் கடந்த வருடத்தைப்போன்றே இவ்வருடமும் ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக உறுப்பினர்கள் தமது பங்குபற்றுதலை உறுதிசெய்து பயன்பெறவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

அடுத்து இடம்பெற்ற பிரதம அதிதியின் உரையில் பேசிய பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், கடந்த வருடம் இடம்பெற்ற இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் எமது பிரதேசத்திலிருந்து போட்டியிட்ட தமிழ் இளைஞன் நிச்சயமாக வெற்றி பெறுவார் எனத் திடமாக நம்பியிருந்தபோதிலும் எமது பிரதேச இளைஞர் கழக உறுப்பினர்களின் குறைவான வாக்களிப்பினால் அச்சந்தர்ப்பம் இழக்கப்பட்டதாகக் கூறி தனது வருத்தத்தைத் தெரிவித்தார். ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சம்மேளனச் செயற்பாடுகளில் ஒழுக்கமே பிரதான விடயமாகக் கொள்ளப்படுவதுடன், இச்சம்மேளனத்துக்கு அங்கத்தவர்களைத் தெரிவுசெய்யும்போது அதனையே பிரதான தகுதியாகக் கொண்டு செயற்படவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து 2016 ஆம் வருடத்துக்கான இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்துக்கான நிருவாகத் தெரிவு இடம்பெற்றது. இதில் இச்சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு இம்முறை மூவர் போட்டியிட்டதையடுத்து வாக்களிப்பு முறையில் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தீர்மானத்துக்கமைய நடாத்தப்பட்ட தேர்தலில் கே.தேவதர்ஷன் ஏனைய இருவரையும்விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கடந்த வருடத்தைப் போன்றே இம்முறையும் ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின் தலைவராகத் தெரிவானார்.

அவரைத்தொடர்ந்து பிரதேச சம்மேளனத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விபரம் வருமாறு:

·         உப தலைவர்: எஸ்.மனோஜ் பிரசன்னா.
·         செயலாளர்: இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் (பதவி வழியாக).
·         உப செயலாளர்: பி.கௌசல்யா.
·         பொருளாளர்: எஸ்.ரகுதேவ்.
·         அமைப்பாளர்: ஆர்.சதுர்த்திக்கா.
·         உப அமைப்பாளர்: பி.டயானி.

குழுச் செயலாளர்கள்:
·         விளையாட்டு: கே.ரஞ்சித்.
·         கலாசாரம்: எம்.சிவர்ணியா.
·         முயற்சியாண்மை: பி.திவ்வியராஜ்.
·         ஊடகம் மற்றும் தகவல்: கே.பிருதிவிராஜ்.
·         தேசிய சேவை: யூ.கிதுர்ஷன்.
·         கல்வி/பயிற்சி, தொழில் ஆலோசனை மற்றும் வழிநடத்தல்: கே.திவ்யா.
·         நிதி: எம்.வித்யா.
·         சூழல் பாதுகாப்பு: வி.கிருஜன்.
·         கணக்காளர்: பி.பிரசாந்தினி.

ஒழுக்காற்றுக் குழு:
·         ஈ.ஹேமராஜ்.
·         எம்.மோனிஷா.
·         ஜே.ருத்ரா.
·         கே.கிருத்திகா.
·         எfப்.கலிஸ்டா.

ஆலோசனைக் குழு:
1.       வி.ஜெகதீசன் (பிரதேச செயலாளர்)
2.       ரி.கஜேந்திரன் (உதவிப் பிரதேச செயலாளர்)
3.       யூ.எல்.ஏ.மஜீத் (மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்)
4.       ஏ.சசீந்திரன் (நிருவாக உத்தியோகத்தர்)
5.       ஏ.தர்மதாஸ (கிராம அலுவலர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர்)

இறுதியாக இச்சம்மேளனத்தின் செயற்பாடுகளை ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக மீளாய்வு செய்யும் நோக்குடன் மாதாந்தக் கூட்டங்களை நடாத்தி பிரதேச செயலாளருக்கும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துக்கும் முன்னேற்ற அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது என்ற தீர்மானமும் அங்கு நிறைவேற்றப்பட்டது.

















No comments: