Monday, 8 February 2016

பனங்காடு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் கட்டுப்பாட்டுச் சபைக்கு அங்கத்தவர்கள் நியமனம்

ஆலையடிவேம்பு தெற்கு வலயத்துக்கான பனங்காடு, வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் 2016 ஆம் ஆண்டுக்கான கட்டுப்பாட்டுச் சபை அங்கத்தவர்களைத் தெரிவுசெய்வதற்கான பொதுச்சபைக் கூட்டம் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இன்று (08) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், திவிநெகும தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, மகா சங்கங்களின் முகாமைத்துவப் பணிப்பாளரும் கருத்திட்ட முகாமையாளருமான திருமதி. அருந்ததி மகேஸ்வரன், ஆலையடிவேம்பு தெற்கு வலயத்துக்கான வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் முகாமையாளர் கே.அசோக்குமார் மற்றும் உதவி முகாமையாளர் எஸ்.பாக்கியராஜா ஆகியோருடன் பொதுச்சபை அங்கத்தவர்களும் பங்கேற்ற இக்கூட்டத்தில் கட்டுப்பாட்டுச் சபையின் தெரிவு மற்றும் அதில் பின்பற்றப்படும் விதிமுறைகள் தொடர்பாக திவிநெகும தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா அங்கத்தவர்களுக்குத் தெளிவுபடுத்தினார். 


தொடர்ந்து திவிநெகும பயனாளிகளுக்கு அத்திணைக்களத்தின் உதவிகள் சரியாகச் சென்றடைவதை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு தெரிவுசெய்யப்படவுள்ள கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் கைக்கொள்ளவேண்டிய தெரிவுமுறைகள் குறித்துப் பிரதேச செயலாளர் அங்கு உரையாற்றினார்.


அதனையடுத்து இடம்பெற்ற கட்டுப்பாட்டுச் சபைக்கு அங்கத்தவர்களைத் தெரிவுசெய்வதற்கான நிகழ்வில் குறித்த வலயத்துக்குட்பட்ட 11 கிராமசேவகர் பிரிவுகளில் செயற்பட்டுவரும் திவிநெகும பயனாளிகள் குழுக்களிலிருந்து 15 அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து குறித்த கட்டுப்பாட்டுச் சபை அங்கத்தவர்களிலிருந்து தலைவி, உப தலைவி, செயலாளர், உப செயலாளர், பொருளாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் இவ்வாண்டு இறுதிவரை தமக்கான பணிகளில் தொடர்ந்து செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.















No comments: