Friday, 26 February 2016

ஆலையடிவேம்பு பிரதேசமட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம்


ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கிராமமட்ட சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் பங்குபற்றிய இவ்வருடத்தின் முதலாவது பிரதேசமட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜமீல் தலைமையில் இன்று (26) காலை இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பொலிஸ் பிராந்தியங்களுக்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியான கே.ஜே.எஸ்.கருணாசிங்க, ஆலையடிவேம்பு பிரதேச அரச நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன் ஆகியோருடன், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், ஆலையடிவேம்பு பிரதேசக் கிராம உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கிராமமட்ட சிவில் பாதுகாப்புக் குழுக்களின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் முதலில் ஆலையடிவேம்பு பிரதேச சிவில் சமுகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டன. இதன்போது கருத்துத் தெரிவித்த சிவில் பாதுகாப்புக் குழுக்களின் அங்கத்தவர்கள் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களின் பாவனையை முன்னிலைப்படுத்தியதோடு, ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கு இன்று பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள மதுபானசாலைகள் மூன்றினையும் மூடிவிட நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளரைக் கோரியிருந்தனர்.

அவர்களுக்குப் பதிலளித்த பிரதேச செயலாளர், மதுபானசாலைகளை மூடுவதற்கான அதிகாரம் தனக்கு எப்போதும் வழங்கப்படவில்லையெனவும் அது மதுவரித் திணைக்கள ஆணையாளருக்கே இருப்பதாகவும் குறிப்பிட்டதோடு, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தான் கடமையாற்றிவரும் கடந்த ஆறு வருடங்களில் பெண்களின் அபிவிருத்தியை மையப்படுத்தும் ஒரேயொரு அரச சார்பற்ற நிறுவனம் மாத்திரமே குறித்த மதுபானசாலைகளை மூடவேண்டும் என்ற கோரிக்கையோடு குடும்பத் தலைவிகளைக் கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை சிலவருடங்களுக்கு முன்பு முன்னெடுத்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், அரசினால் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டு நடாத்தப்படும் இவ்வாறான மதுபானசாலைகளை மூடுவதற்கான எவ்விதக் கட்டளையையும் சட்டரீதியாகத் தன்னால் பிறப்பிக்கமுடியாதெனவும், அதுபோலவே அங்கு மதுபானத்தைக் கொள்வனவு செய்பவர்களைப் பொலிசாராலும் கைது செய்யமுடியாதெனவும் குறிப்பிட்டதோடு, தன்னால் முடிந்தது பொதுமக்களின் கோரிக்கையை உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதே எனவும் குறிப்பிட்டார்.

அடுத்துப் பேசிய அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளையும் 80 கிராமசேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒரு பெரிய பிராந்தியமொன்றில் சட்டம், ஒழுங்குகளைப் பாதுகாக்கவேண்டிய பெரும் பொறுப்புடைய எமக்கு அதற்கான ஆளணி இல்லாதிருப்பதாகவும், வெறும் 150 உத்தியோகத்தர்களைக் கொண்டே அத்தனை கடமைகளையும் தாங்கள் நிறைவேற்றவேண்டிய கட்டாயத்திலிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் ஒரு மதுபானசாலை எங்கு அமைக்கப்படவேண்டும் என்பதை மதுவரித் திணைக்களமே தீர்மானிப்பதாகவும், அம்மதுபானசாலை சட்டத் தேவைகளுக்கமைய ஒழுங்காகச் செயற்படுகின்றதா என்பதைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கே பொலிசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டதோடு, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் மொத்தமாக மூன்று மதுபான விற்பனை நிலையங்களே உள்ளதாகவும், அவை மூன்றும் ஆலையடிவேம்பு பிரதேசத்திலேயே உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனால் ஏனைய இரண்டு பிரதேசங்களை விடவும் அதிகமான சமூகப் பிரச்சனைகள் தமிழ் மக்கள் முழுமையாக வாழும் ஆலையடிவேம்பு பிரதேசத்திலேயே இருப்பதாகக் குறிப்பிட்டதோடு, மதுபானசாலைகளைத் தமது பிரதேசங்களிலிருந்து அகற்றுவற்கான நடவடிக்கைகளை சிவில் சமூகங்களின் பிரதிநிதிகளே மேற்கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டார். அவ்வாறல்லாது பொதுமக்கள் ஒன்றிணைந்து அகிம்சை வழியில் அவற்றை அகற்ற முற்படும்போது அரசினால் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட அவற்றைப் பொதுமக்களிடமிருந்து பாதுகாக்கவேண்டிய கடமைகளே உயரதிகாரிகளால் பொலிசாருக்குப் பணிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த புதிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், ஆலையடிவேம்பு பிரதேசத்திலிருந்து குறித்த மதுபானசாலைகளை அகற்றுவது தொடர்பான கோரிக்கையை சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு உடனடியாகத் தமக்கு எழுத்து மூலம் கையளிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், இது தொடர்பான உதவிகளைத் தமது கையடக்கத் தொலைபேசிக்கு அழைத்து எந்தநேரத்தில் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறியதோடு தனது தொலைபேசி இலக்கங்களையும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேசத்துக்குள் சிறிது கால இடைவெளியில் புதிதாக ஊடுருவியுள்ள வாராந்த வட்டிக்குக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் பிரச்சனை தொடர்பாக அங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சிவில் பாதுகாப்புக் குழுக்களின் அங்கத்தவர்கள், பொதுமக்களின் வீடுகளைத் தேடிச்சென்று ஆசை வார்த்தைகளையும், பரிசுகளையும் வழங்கும் குறித்த நிதி நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் பின்னர் பொதுமக்களைக் குழுக்களாக ஒன்றுசேர்த்து சக அங்கத்தவர்களின் உத்தரவாதத்தோடு இலட்சக்கணக்கில் தனிப்பட்ட கடன்களைப் பரவலாக வழங்கிவருவதாகக் குறிப்பிட்டதோடு, அனைத்தையும் எழுத்தில் பெற்றுக்கொள்ளும் அவர்கள் ஒவ்வொரு வாரமும் கூடிய வீதத்தில் பெருமளவான பணத்தை வட்டியாக அறவிட்டு வருவதாகவும், அவ்வாறு வட்டி செலுத்தத் தவறுவோரை அவர்கள் கையொப்பமிட்ட ஆவணங்களைக் காட்டி அச்சுறுத்துவதாகவும் குறிப்பிட்டனர். இதனால் அவ்வாறு கடன்பட்டவர்கள் அதனைத் திருப்பிச் செலுத்தமுடியாத நிலையில் தற்கொலைக்கு முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டனர்

இதற்குப் பதிலளித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், அவ்வாறான நிறுவனங்கள் குறித்து தமக்குச் சில முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும், அது தொடர்பில் விசாரணைகளைத் தாம் மேற்கொண்டுவருவதாகவும் குறிப்பிட்டதோடு, அவ்வாறானவர்கள் உங்களது வீடு தேடி வரும்போது விரட்டியடியுங்கள். வருமானத்துக்கு வழியில்லாமல் எந்த தைரியத்தில் அவர்களிடம் கடன் பெற முனைகின்றீர்கள் எனக் கேள்வி எழுப்பியதோடு அவர்களை உட்காரவைத்து உபசரித்தால் அதற்கான பலனை (தூக்கில்) தொங்கித்தான் அனுபவிப்பீர்கள் எனவும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.













No comments: