Monday, 1 February 2016

தொழில் நுட்ப ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டது....


திருக்கோவில் வலயதிட்குட்பட்ட அக்கரைபற்று இராமகிருஸ்ணமிசன் மகா வித்தியாலயத்தின் தொழில் நுட்ப ஆய்வு கூடம் (01.02.2016) 1.20 மணியளவில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனால் திறந்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்,கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் கல்வித்திணைக்கள அதிகாரிகள் பெற்றோர்கள் மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.பாடசாலையின் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் நிகழ்வுகள்   இடம்பெற்றன

தற்போதைய ஜனாதிபதியின் வெற்றிக்கு அதிகளவில்  பங்களிப்புச் செய்தவர்கள் மலையக மக்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுமே ஆவர்.

 ஆனால், தற்போது அதிகளவான சலுகைகளையும் அமைச்சுப் பதவிகளையும் அவருக்கு எதிராகச் செயற்பட்டவர்களே  அனுபவிக்கின்றனர். எனவே, எங்களின் நலன்களும் இன்னும் அதிகமாக கவனிக்கப்பட வேண்டுமென இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். அம்பாறை, திருக்கோவிலில் அமைந்துள்ள தம்பிலுவில் மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத் திறப்பு விழா, இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 


இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு வித்திட்டவர்கள் தமிழர்கள் என்று கூறினால் அது மிகையாகாது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் அதாவது, ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களிலும் தமிழ் மக்கள்  முழுமையாகச் செயற்பட்டனர். ஆனால், இவற்றுக்கு  எதிராகச் செயற்பட்டவர்கள் இன்று சலுகைகளையும் வேறு விடயங்களையும் அனுபவிக்கின்றனர்' என்றார். 'சில விடயங்களில் நாங்கள் பின்தள்ளப்படுகின்றோம். குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்திக்குழு இணைத் தலைவர்கள் தெரிவில் நாம் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். கடந்த காலத்தில்  இந்தக் குழுவை முன்னின்று நடத்தியவர்கள் முறையாகச் செயற்படவில்லை. 

எனவே, இந்த நிலைமைகள் தொடருமானால், நல்லாட்சி அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த  நிலைமைகளை அரசாங்கம் கவனத்திற்கொள்ள வேண்டும். இது மட்டுமல்லாமல், கிழக்கு மாகாணத்திலும் யார் தேர்தலின்போது அரசாங்கத்தின் வெற்றிக்காக உழைத்தார்களோ அவர்களுக்கு உரிய இடத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

No comments: