Monday, 15 February 2016

சுவாட் நிறுவனத்தால் நடாத்தப்பட்ட திட்ட அமுலாக்கம் தொடர்பான ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கு

சர்வதேசத் தொண்டு நிறுவனமான UNDPயின் அனுசரணையுடன் அரச சார்பற்ற உள்நாட்டு அமைப்பான சுவாட் எனப்படும் அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்பினால் ஆலையடிவேம்பு உட்பட அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மாவட்ட அபிவிருத்தித் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் (SDDP) வேலைத்திட்டத்தின்கீழ் தெரிவுசெய்யப்பட்ட 20 கிராமமட்ட அபிவிருத்திச் சங்கங்களின் உறுப்பினர்களை வலுவூட்டும் ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கு இன்று (15) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


சுவாட் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் வை.சுகேந்திரராஜ் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கிற்கு விசேட விருந்தினராக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்து சிறப்பித்ததுடன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, UNDP நிறுவனத்தின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கான பிராந்திய இணைப்பாளர் எஸ்.ரகுராமமூர்த்தி, களநிலைப் பொறுப்பாளர் பி.மனோஜ் ஆகியோரும் சுவாட் நிறுவனத்தின் கள உத்தியோகத்தர் எம்.நாகேஸ்வரனும் கலந்துகொண்டிருந்தனர்.

இப்பயிற்சிக் கருத்தரங்கை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய திட்ட உத்தியோகத்தர் வை.சுகேந்திரராஜ் இத்திட்டத்தின் நோக்கங்கள் குறித்தும், செயற்பாடுகள் மற்றும் அவற்றின் மூலம் அடைந்துகொள்ள எதிர்பார்த்திருக்கும் பெறுபேறுகள் குறித்தும் கிராமமட்ட அபிவிருத்திச் சங்கங்களின் உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தினார். இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், இத்திட்டமானது நல்லாட்சியை உறுதிப்படுத்தல் மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல் ஆகிய இரு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு முன்னெடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டதோடு, நல்லாட்சியை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே இப்பயிற்சிக் கருத்தரங்கு இன்று நடாத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார். அதற்கு மேலதிகமாகக் கிராமமட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் பங்கெடுத்துவரும் இளைஞர், யுவதிகளின் தனிமனிதக் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கோடு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து அவர்களுக்கு இளைஞர் தலைமைத்துவ மேம்படுத்தல் பயிற்சிகளை வழங்கிவருவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் வாழ்வாதார உதவி வழங்கல் வேலைத்திட்டத்தின்கீழ் தற்போது இலகுவில் பாதிப்படையக்கூடிய தொழில் முயற்சிகள் மற்றும் சிறிய, நடுத்தர உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுவரும் இளைஞர், யுவதிகளுக்கு உதவக்கூடிய தொழில் முயற்சியாண்மை அபிவிருத்திச் செயற்பாடுகளையும் முன்னெடுத்துவருவதாகவும் அங்கு தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து இடம்பெற்ற விருந்தினர் உரையில் பேசிய பிரதேச செயலாளர், சுனாமி அனர்த்தத்தின் பின்னர் அம்பாறை மாவட்டத்தின் மீள்கட்டுமானப் பணியில் பங்கெடுத்த பல்வேறு அரச, அரசசார்பற்ற, உள்நாட்டு, வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களால் கிராமமட்ட அபிவிருத்திக் குழுக்களின் அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறுபட்ட பயிற்சிகளின் பலன் சரியானவகையில் அவர்களது சமுக மக்களுக்குச் சென்றடையவில்லை எனக் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய UNDP நிறுவனத்தின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கான பிராந்திய இணைப்பாளர் எஸ்.ரகுராமமூர்த்தி, சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இலங்கையில் இயங்கிய பல நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் இப்போது நாட்டில் இல்லை எனத் தெரிவித்ததுடன், அப்போது வழங்கப்பட்டது போன்று நிவாரணங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் இப்போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும், மாறாக ஒவ்வொரு இலங்கைப் பிரஜையினதும் தனிமனித மேம்பாட்டை அபிவிருத்தி செய்வதை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களே முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டதோடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி வழங்கலோடு UNDP நிறுவனம் மட்டக்களப்பு, அம்பாறை உட்பட இலங்கையில் 6 மாவட்டங்களில் பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துவருவதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து UNDP நிறுவனத்தின் களநிலைப் பொறுப்பாளர் பி.மனோஜ் வளவாளராகவிருந்து குறித்த பயிற்சிக் கருத்தரங்கை முன்னெடுத்தார். பயிற்சியின் இறுதியில் கலந்துகொண்ட கிராமமட்ட அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுக்குத் எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்கப்படவுள்ள பயிற்சிகள் குறித்த தேவை மதிப்பீடு ஒன்றும் அங்கே இடம்பெற்றிருந்தது.











No comments: