ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனின் கோரிக்கைக்கமைய அரச சார்பற்ற தொண்டு நிறுவனமான
இஸ்லாமிக் ரிலீfப் அமைப்பினரால் கையளிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகளை வறிய
மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு சின்னப்பனங்காடு, புளியம்பத்தை
கிராமத்தில் நேற்று (08) மாலை இடம்பெற்றது.
புளியம்பத்தையிலுள்ள
மகாசக்தி பாலர் பாடசாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளருடன் திவிநெகும
தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, கிராம அலுவலர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர்
ஏ.தர்மதாச, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சுதர்சினி சிவகுமார்
மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.தெய்வேந்திரன், கே.ஜெயராம்
ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
இதன்போது
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள புளியம்பத்தை
கிராமத்திலிருந்து போக்குவரத்து வசதிகள் அற்றநிலையில் சுமார் நான்கு
கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள பனங்காடு கிராமப் பாடசாலைக்குத் தினமும் கால்நடையாகச்
சென்றுவரும் க.பொ.த. சாதாரண தரம் பயிலும் மாணவிகள் மூவருக்குப் பிரதேச செயலாளர் குறித்த
துவிச்சக்கரவண்டிகளை வழங்கிவைத்தார்.
அங்கு
கருத்துத் தெரிவித்த அவர், புளியம்பத்தை கிராமத்திலுள்ள பிரதான பாதைக்குக்
கொங்கிறீட் இடுவதற்கான வேலைத்திட்டத்தைத் தான் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும்,
அக்கிராமத்தில் நிலவுகின்ற குடிநீர்ப் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் பொருட்டு
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடாத்தி இரண்டு
நாட்களுக்கு ஒருமுறை நீர்த்தாங்கிகளில் பவுசர்களைக் கொண்டு நீர் நிரப்ப
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் கற்பதற்கு வசதிகளின்றி
சட்டவிரோதமானவகையில் கால்நடைப் பராமரிப்பு மற்றும் கூலி வேலைகளில்
ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறுவர்களை அவற்றிலிருந்து விடுவித்து, மாலைநேர
வகுப்புக்களுக்கு அனுப்பும்வகையில் சில தொண்டு நிறுவனங்களோடு கலந்தாலோசித்து,
ஆசிரியர்களைக் கொண்டு இலவச வகுப்புக்களை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும்
குறிப்பிட்டதோடு, தற்போது செயற்படாதுள்ள பாலர் பாடசாலையைத் தொடர்ந்து
இயங்கச்செய்வதற்கு மகாசக்தி நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும்
குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment