இந்தியாவில் இருந்து ஹரன்..
12வது தெற்காசிய விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வு கோலாகலமாக குவாத்தி நகரிலுள்ள இந்திராகாந்தி மெய்வல்லுனர் அரங்கில் நேற்று (16) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இறுதி நாள் நிகழ்வுக்கு அசாம் மாநில முதலமைச்சர் தருன் கோகி, இந்திய இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் சர்வாநந்தா சொனோவல் ஆகியோர் பிரதம அதிதியாகவும் இலங்கை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பங்களாதேஷ் இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் விரன் சிக்டர், நேபாள் இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் சத்ய நாராயண மண்டல், அசாம் மாநில போக்குவரத்து, இளைஞர் நலனோம்பல், விளையாட்டுத்துறை அமைச்சர் ஸ்ரீ அஜித் சிங் ஆகியோர் விஷேட அதிதியாகவும் மற்றும் இந்திய ஒலிம்பிக் சம்மேளன மற்றும் தெற்காசிய விளையாட்டு சம்மேளன பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் போட்டியில் பங்குபற்றிய அனைத்து நாடுகளின் வீரர்களின் அணி நடை இடம்பெற்றது. அத்துடன் பிரமாண்டமான முறையில் பொலிவுட் நடிகர்களின் இசை, நடன, பாடல் நிகழ்வும் இடம்பெற்றது.
மேலும் அசாம் மற்றும் ஹிமாலய மாநிலங்களின் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது. இறுதி நாள் நிகழ்வினை கண்டுகழிப்பதற்கு லட்சத்திற்கு அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். 12வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் அதிக பதக்கங்களைப் பெற்று இந்தியா முதலாமிடத்தையும், இலங்கை இரண்டாமிடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
13வது தெற்காசிய விளையாட்டு போட்டி 2018ம் ஆண்டு நேபாளத்தில் இடம்பெறுவதற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன் தெற்காசிய விளையாட்டு சம்மேளனத்தின் கொடியும் நேபாள் நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
|
No comments:
Post a Comment